ரூ.5½ லட்சம் கோடி செலவில் 60 நதிகளை இணைக்கும் திட்டம் பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்


ரூ.5½ லட்சம் கோடி செலவில் 60 நதிகளை இணைக்கும் திட்டம் பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 1 Sep 2017 11:00 PM GMT (Updated: 1 Sep 2017 9:25 PM GMT)

ரூ.5½ லட்சம் கோடி செலவில் நாட்டின் 60 மிகப்பெரிய நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம்(அக்டோபர்) தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

ரூ.5½ லட்சம் கோடி செலவில் நாட்டின் 60 மிகப்பெரிய நதிகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம்(அக்டோபர்) தொடங்கி வைக்கிறார்.

வறட்சி–வெள்ளம்

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் சரிவர பருவ மழை பெய்யவில்லை. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் கடும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கின. இதனால் பல லட்சம் ஹெக்டேர் விளை நிலங்கள் காய்ந்து போனது.

அதேநேரம் இந்த ஆண்டு பீகார், அசாம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனத்த மழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டது. அண்டைநாடுகளான வங்காளதேசம், நேபாளம் ஆகியவற்றில் பெய்த பலத்த மழை காரணமாகவும் இந்திய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த வாரம் கங்கை, கோதாவரி, நர்மதை உள்ளிட்ட மிகப்பெரிய நதிகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடியது.

60 நதிகள் இணைப்பு

இதையடுத்து வறட்சியையும், வெள்ளத்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் விதமாக நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்து இருக்கிறது. வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது 2002–ம் ஆண்டு நாட்டிலுள்ள நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.

அண்மையில் இந்த திட்டத்தை செயல்படுத்த மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய 60 நதிகளை இணைக்கும் இத்திட்டம் ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும்.

முதல் கட்டமாக உத்தரபிரதேசம்–மத்தியபிரதேசம் இடையே ஓடும் கென் நதியையும், மத்திய பிரதேசத்தில் ஓடும் பத்ராவதி(பெத்வா) நதியையும் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இரு நதிகளும் சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு இணைக்கப்படும். கென்–பத்ராவதி நதிகளை இணைப்பதற்கான திட்டத்துக்கு மத்திய மந்திரி சபை இன்னும் ஓரிரு வாரங்களில் தனது ஒப்புதலை அளித்துவிடும் என்று தெரிகிறது.

மோடி தொடங்கி வைக்கிறார்

இரு நதிகளையும் இணைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம்(அக்டோபர்) தொடங்கி வைக்கிறார். அனேகமாக மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2–ந்தேதி இத்திட்டத்தை மோடி டெல்லியில் இருந்தவாறு தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கென்– பத்ராவதி நதிகள் இணைப்புக்காக மத்திய பிரதேசத்தில் கான்காவ் என்னும் கிராமத்தில் கென் நதியின் குறுக்கே 250 அடி உயர அணை ஒன்றும் கட்டப்படுகிறது. இந்த அணையில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இதைத்தொடர்ந்து படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் நதிகளை இணைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படும்.

எதிர்ப்பு

கான்காவ் கிராமத்தில் அணை கட்டுவதற்காக வனப்பகுதியில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களை வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதற்கு அணை கட்டும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஏனெனில் கான்காவ் கிராமத்தில் அணை கட்டும்போது அங்குள்ள 9 ஆயிரம் ஹெக்டேர் வனப் பகுதி நீரில் மூழ்கி விடும்.

இதில் பெரும் பகுதி வனப்பகுதி 30 முதல் 35 புலிகளை கொண்ட பன்னா புலிகள் சரணாலயம் பகுதியில் வருகிறது. இன்னொரு புறம் உலகின் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ள கஜூராஹோ கோவில் அமைந்திருக்கிறது.

இதுபற்றி ஆங்கிலேயர் காலத்தில் பன்னா பகுதியை ஆட்சி செய்த மன்னர் வாரிசுகளில் ஒருவரான ஷியாமெந்திர சிங் கூறுகையில், ‘‘இங்கு அணை கட்டுவது சுற்றுச் சூழலுக்கு பேரழிவாக அமையும். மேலும் அணையின் கீழ்ப்பகுதியில் வெள்ள அபாயமும் ஏற்படும்’’ என்றார்.

பன்னா பகுதி கிராம மக்கள் கூறும்போது, ‘‘இதுவரை எங்களது கிராமத்தில் மின்சாரம் இல்லை. அணை கட்டுவதன் மூலம் எல்லோருக்கும் பயன் கிடைக்கும் என்றால் அதை எதிர்க்க மாட்டோம்’’ என்றனர்.


Next Story