கவுரி லங்கேஷ் கொலையில் மகிழ்ந்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய மந்திரிக்கு டுவிட்டரில் எதிர்ப்பு


கவுரி லங்கேஷ் கொலையில் மகிழ்ந்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய மந்திரிக்கு டுவிட்டரில் எதிர்ப்பு
x

கவுரி லங்கேஷ் கொலையில் மகிழ்ந்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய மந்திரிக்கு டுவிட்டரில் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

புதுடெல்லி,

பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.

தைரியமிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதியவர். பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் டுவிட்டரில் ஒரு தரப்பு தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தது.  

பத்திரிக்கையாளர் கொலையில் மகிழ்ச்சி தெரிவித்து டுவிட் செய்தவர்களுக்கு எதிராகவும் டுவிட்டரில் தகவல்கள் வெளியிடப்பட்டது. இந்த மோதல்களுக்கு இடையே மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில், “ஒருவர் கொல்லப்பட்டதற்கு மகிழ்ச்சியை தெரிவிப்பது என்பது மிகவும் அவமானத்திற்குரியது, முற்றிலும் வருந்தத்தக்கது மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. சமூக வலைதளங்கள் அதற்கானது கிடையாது.” என்றார். கொலைக்கு மகிழ்ச்சி தெரிவித்து செய்திகள் வெளியிடுவதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார். 

இதனையடுத்து மத்திய மந்திரிக்கு டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அமைதியாகதானே இருந்தீர்கள் என கேள்வி எழுப்பட்டு உள்ளது. சிரஞ்சீவி என்பவர் பதிவிட்டு உள்ள தகவலில்  “மக்களவை தேர்தலில் வெற்றிபெறாத நபர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா தொண்டர்களின் உயிர் தியாகத்தினால் பதவியை அனுபவித்து வருகிறார்,”என குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோன்று ரவிசங்கர் பிரசாத்தை விமர்சனம் செய்து டுவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.

Next Story