விமானங்கள், ரெயில் நிலையங்களில் ரசாயன தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் சதிதிட்டம்


விமானங்கள், ரெயில் நிலையங்களில் ரசாயன தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் சதிதிட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2017 6:22 AM GMT (Updated: 10 Sep 2017 6:22 AM GMT)

விமானங்கள், ரெயில் நிலையங்களில் ரசாயன தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டிஉள்ளனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற மக்கள் தங்களது பயணங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் இடங்களில் பயங்கரவாதிகள் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அங்கு பாதுகாப்பை அதிகரிக்கும்மாறு மாநில அரசுக்களுக்கு எச்சரிக்கையை விடுத்து உள்ளது. சிறிய ரக ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்கள் மூலமோ நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் உளவுத் துறை குறிப்பிட்டுள்ளது.

விமானத்தில் கொடிய நச்சு வாயுக்களை வெளியிட பயன்படும் பொருட்களை கவனிக்கவும் பாதுகாப்பு படைகளுக்கு எச்சரிக்கையானது அனுப்பட்டு உள்ளது. 

செப்டம்பர் ஒன்றாம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுக்கள், விமான போக்குவரத்துறை அமைச்சகம் மற்றும் பிற பாதுகாப்பு முகமைகளுக்கு கடிதம் எழுதி உள்ளது. வர்த்தக விமான போக்குவரத்தை பயங்கரவாதிகள் இலக்காக கொண்டு உள்ளனர் என மத்திய பாதுகாப்பு முகமைகள் எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் விமானத்தில் நடத்தப்பட இருந்த பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் அதுபோன்ற தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பது எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக சிறிய மின்னணு சாதனத்துக்குள் வெடிப்பொருள், ரசாயன ஆயுதத்தை மறைத்து வைத்து பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. விமானப் பயணியாக பயங்கரவாதிகள் ரசாயன வாயு அடங்கிய பொருட்களை தங்களுடனோ அல்லது விமானத்தில் அனுப்பப்படும் சரக்குகளுடனோ கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கையில் தெரிவித்து உள்ளது. முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.


Next Story