‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா மகன் பயன்பெற்றார்’


‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா மகன் பயன்பெற்றார்’
x
தினத்தந்தி 9 Oct 2017 12:00 AM GMT (Updated: 8 Oct 2017 10:03 PM GMT)

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அமித் ஷா மகன் பயன் பெற்றார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி அதிரடியாக அறிவித்து, பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்தது இன்று வரை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று ஒரு செய்தி வெளியிட்டார். அதில் அவர், ‘‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஒரே ஒருவர் மட்டும் பயன் அடைந்துள்ளார் என்பதை கடைசியாக கண்டு விட்டோம். அவர் ‘ஷா இன் ஷா ஆப் டெமோ’ ஜெய் அமித்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டில் பலன் அடைந்த ஒரே நபர், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் என்று கூறி, அது தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள ‘தி வயர்’ இணையதளத்தின் ‘லிங்க்’ தந்துள்ளார்.

அதில், ஜெய் அமித்தின் டெம்பிள் என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் 2012–2013, 2013–2014 நிதி ஆண்டுகளின் நிறைவில் முறையே ரூ.6,230 மற்றும் ரூ.1,724 நஷ்டத்தை சந்தித்து உள்ளது. 2014–15 நிதி ஆண்டில்தான் ரூ.18,728 லாபம் காணப்பட்டுள்ளது. 2015–16 நிதி ஆண்டில் அந்த நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.80½ கோடியாக தடாலடியாக உயர்ந்துள்ளது. இதில், டெல்லி மேல்–சபை எம்.பி., ஒருவரது உறவினரின் நிதி நிறுவனம், ஜெய் அமித் நிறுவனத்துக்கு ரூ.15 கோடியே 78 லட்சம் கடன் வழங்கியதும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஜெய் அமித் மீதான ராகுல் காந்தியின் டுவிட்டர் குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வக்கீலுமான கபில் சிபல், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் 2014–ம் ஆண்டு, மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிலரது அதிர்ஷ்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய கம்பெனிகள் பதிவாளரிடம் தாக்கல் செய்த அறிக்கைகள், ஜெய் அமித்தின் கம்பெனி, 2014–க்கு பின்னர் லாபம் ஈட்ட தொடங்கி உள்ளதை காட்டுகின்றன.

இன்று நாங்கள் பிரதமரிடம் கேட்க விரும்புவதெல்லாம், குள்ள முதலாளித்துவம் பற்றி இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது தான். விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடுவீர்களா? மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் விசாரணைக்கு உத்தரவிடுவீர்களா? அவர்களை கைது செய்யுமாறு கூறுவீர்களா?

ஜெய், அமித், ஷா என்றெல்லாம் பெயர் இருந்தால், அவர்களை யாரால் கைது செய்ய முடியும்?

நமது பிரதம சேவகர் (பிரதமர் மோடி தன்னை எப்போதுமே பிரதம மந்திரி என்று கூறாமல் பிரதம சேவகர் என்று கூறுவது வழக்கம்), எப்போதும் குள்ள முதலாளித்துவம் பற்றி பேசுவது வழக்கம். ஒருவர் மீது ரூ.10 லட்சம் புகார் வந்தால்கூட, அவரை சி.பி.ஐ.யைக் கொண்டு கைது செய்ய வைப்பது வழக்கம்.

ஆனால் இப்போது பிரதமர் பேச மாட்டார். ஏனென்றால் இது அவரது கட்சித்தலைவரின் மகன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story