காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது


காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது
x
தினத்தந்தி 10 Oct 2017 1:02 PM GMT (Updated: 10 Oct 2017 1:02 PM GMT)

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து வருகிறது.ஸ்ரீநகர்/ஜெய்பூர்,


காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தியைத் தொடர்ந்து அவர்களது வாரிசாக ராகுல் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். 46 வயதாகும் ராகுல்காந்தி 2004-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். அந்த ஆண்டு பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அமேதி தொகுதியில் தொடர்ந்து எம்.பி. ஆக இருந்து வரும் ராகுல் 2007-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பையும் அவர் வகித்தார்.

2013-ம் ஆண்டு ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராகுலை காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் தலைவர் பொறுப்பில் இருக்கும் சோனியா அது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே பிரியங்காவும் கட்சிக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டு வருகிறது. 

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த போது காங்கிரஸ் துனைத்தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது, காங்கிரஸ் தலைவராக பதவியேற்க தயாராக இருப்பதாக கூறி இருந்தார். ராகுல்காந்தியின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர். காங்கிரஸ் துணைத்தலைவராக உள்ள ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக வருகிற நவமபர் மாதம் தேர்ந்து எடுக்கப்படுகிறார் எனவும் சோனியா தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும் பாராளுமன்ற குழு தலைவர் பதவியிலும் இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியது. 

தீபாவளிக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பெறுப்பை ராகுல் காந்தி ஏற்கலாம் எனவும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தரப்பு தகவல் வெளியாகியது.

 இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைமை பெறுப்பை ராகுல் காந்தி ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து உள்ளது. 

ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் பிராந்திய காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

“ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் பாரதீய ஜனதாவிற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக மக்களின் குரலை காங்கிரஸ் வலுப்படுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக வேண்டும் என விரும்புகிறார்கள், எனவே நாங்கள் இதுதொடர்பாக தீர்மானம் கொண்டு உள்ளோம்,” என ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறிஉள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதேபோன்று ஜம்மு காஷ்மீர் மாநில பிராந்திய காங்கிரசும் ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என கோரி உள்ளது.

Next Story