டெங்கு பற்றி ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது -ஓ.பன்னீர்செல்வம் தகவல்


டெங்கு பற்றி ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது -ஓ.பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2017 12:00 AM GMT (Updated: 12 Oct 2017 9:07 PM GMT)

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், டெங்கு பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய தமிழகத்துக்கு மத்திய குழு வர இருப்பதாக தெரிவித்தார்.

புதுடெல்லி, 

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். லோக் கல்யாண் ரோட்டில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் 20 நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்தார். மேலும் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.17 ஆயிரத்து 60 கோடியை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது டாக்டர் மைத்ரேயன் எம்.பி.யும் உடன் இருந்தார்.

பின்னர் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடுதல் வீடுகள்

பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அப்போது தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னிடம் தந்த மனுவையும் அளித்து விவரமாக எடுத்துக் கூறினேன். அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்கு தேவையான அளவு நிலக்கரியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டு இருக்கிறோம். பிரதமரின் கனவு திட்டமான அனைவருக்கும் வீடு திட்டம் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு 10 லட்சம் வீடுகள் தேவை என்று அறியப்பட்டு உள்ளது. அதில் 3 லட்சம் வீடுகள் தற்போது தரப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக வீடுகள் தேவை என்று கேட்டு இருக்கிறேன்.

மத்திய குழு

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேவையான டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பரிசோதனை கூடங்கள் தேவையான அளவு திறக்கப்பட்டு உள்ளன. மக்களிடையே விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததற்கும், டெங்கு தடுப்புக்கும் சம்பந்தம் இல்லை. போர்க்கால அடிப்படையில் அரசு உரிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், மத்திய அரசின் மருத்துவ குழுவை தமிழகத்துக்கு அனுப்பி என்னென்ன தேவை என்பதை கண்டறிய உத்தரவு பிறப்பித்து இருப்பதாக பிரதமர் என்னிடம் கூறினார்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 


Next Story