சபரிமலையில் பெண்களை அனுமதி: செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் தேவசம் போர்டு தலைவர் சர்ச்சை கருத்து!
சபரிமலை கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும், தாய்லாந்து கோவில் போல இதையும் செக்ஸ் டூரிசமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று தேவசம்போர்டு தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
திருவனந்தபுரம்
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதி கிடையாது. இதை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் என்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமர்வு இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே பெண்களை சபரிமலை கோவிலுக்கு அனுமதிப்பது குறித்து சர்ச்சை கருத்தை கூறி இருந்தார் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன். பெண்கள் தீட்டுபடாமல் இருக்கிறார்களா என்பதை கருவி வைத்தா பரிசோதிக்க முடியும் என்று பேசி இருந்தார்.
இந்த முறையும் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சபரிமலைக் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் இந்த கோவிலுக்கென்று தனி மரியாதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பெண்களை நெரிசல் காலத்தில் கோவிலுக்குள் அனுமதித்தால் அது பல பிரச்சினைகளை எழுப்பும். அவர்களின் பாதுகாப்பிற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. விரும்பத்தகாத செயல்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சபரிமலைக் கோவிலை நாங்கள் தாய்லாந்தில் உள்ள செக்ஸ் டூரிசம் கோவில்கள் போல மாற்ற விரும்பவில்லை. நீதிமன்றமே அனுமதித்தாலும் சுயமரியாதை உடைய பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் தைரியமாக செல்ல விரும்புவார்கள் என்று நான் கருதவில்லை என்றும் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேவசம்போர்டு தலைவரின் இந்த கருத்திற்கு அமைச்சர் சுரேந்திரன் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். எப்படி இந்த மாதிரியான முட்டாள்தனமான ஒப்பீட்டை அவரால் செய்ய முடிகிறது. பெண்களையும், கோவிலையும் அவர் சிறுமைப்படுத்திவிட்டார். இந்த கருத்திற்கு நிச்சயம் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story