நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஐ.என்.எஸ். கில்டன் போர்க்கப்பல் இந்திய கடற்படையுடன் இணைப்பு


நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஐ.என்.எஸ். கில்டன் போர்க்கப்பல் இந்திய கடற்படையுடன் இணைப்பு
x
தினத்தந்தி 16 Oct 2017 11:15 PM GMT (Updated: 16 Oct 2017 9:14 PM GMT)

இந்திய கடற்படைக்கு வலு சேர்க்கும் விதமாக பல்வேறு போர்க்கப்பல்கள் இந்திய தொழில் நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

விசாகப்பட்டினம்,

அந்த வகையில் ஐ.என்.எஸ். கில்டன் என்னும் போர்க்கப்பல் கொல்கத்தாவில் கட்டப்பட்டது. இந்த கப்பல் அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கொண்டு வரப்பட்டு நேற்று இந்திய கடற்படையுடன் சேர்க்கப்பட்டது. ஐ.என்.எஸ். கில்டன் வெகு தொலைவில் வரும் எதிரியின் நீர்மூழ்கி கப்பல்களை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது.

இந்த போர்க்கப்பல் கார்பன் பைபர் கலவையால் தயாரிக்கப்பட்டது. இதனால் மிக உறுதியான வடிவமைப்பை பெற்றுள்ளது. 109 மீட்டர் நீளமும், 12.8 மீட்டர் அகலமும் 3 ஆயிரம் டன் எடையும் கொண்ட இந்த கப்பல் மணிக்கு 46 கி.மீ. வேகத்தில் செல்லும்.

கடந்த சில மாதங்களாக இந்த கப்பலில் இருந்து ஏவுகணைகள், பீரங்கி, நவீன துப்பாக்கிகள் போன்ற அனைத்து வித ஆயுதங்களும், சென்சார் சாதனங்களும், தீ கட்டுப்பாட்டு கருவிகளும் பொருத்தப்பட்டு சோதனை ரீதியில் இயக்கிப் பார்க்கப்பட்டு வந்தது. இதில் முழுமையான வெற்றி கிடைத்ததை தொடர்ந்து கிழக்கு கடற்படையில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்தியாவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஷிவாலிக் கிளாஸ், கொல்கத்தா கிளாஸ், ஐ.என்.எஸ். கமோர்தா மற்றும் ஐ.என்.எஸ். காத்மத் ஆகிய போர்க்கப்பல்களைத் தொடர்ந்து, இந்த புதிய போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

கில்டன் அதிநவீன போர்க்கப்பலை இந்திய கடற்படையின் கிழக்கு படையில் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ஐ.என்.எஸ். கில்டன் போர்க்கப்பலின் சேவையை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அவர் பேசும்போது, “இந்த போர்க்கப்பல் நமது கடற்படையை வலுப்படுத்துவதாக அமையும். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் நமது கடற்படையின் சிறந்த பாதுகாப்பு அரணாக திகழும்“ என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், கடற்படை தளபதி சுனில் லம்பா, கிழக்கு கடற்படையின் தலைவர் எச்.எஸ்.பிஸ்த் மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story