பஹல்காம் விடுதியில் காஷ்மீர் முதல்-மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு


பஹல்காம் விடுதியில் காஷ்மீர் முதல்-மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
x
தினத்தந்தி 12 Nov 2017 9:30 PM GMT (Updated: 12 Nov 2017 6:39 PM GMT)

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்துக்கு உட்பட்ட பஹல்காம் நகருக்கு நேற்று சென்றார்.

பஹல்காம்,

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்துக்கு உட்பட்ட பஹல்காம் நகருக்கு நேற்று சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற விடுதி ஒன்றில் நடந்த ஜவஹர் மலையேற்றக்குழு பயிற்சி நிறுவன செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தியையும் அங்கே சந்தித்து பேசினார்.

அப்போது பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்களை நிர்மலா சீதாராமனின் கவனத்துக்கு கொண்டு சென்றார், மெகபூபா. குறிப்பாக அனந்த்நாக் ஐகிரவுண்டில் ராணுவம் வாடகைக்கு எடுத்திருக்கும் நிலங்களுக்கான வாடகையை மாற்றியமைக்கவும், அதில் பாக்கி வைத்திருக்கும் வாடகைத்தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் மாநிலம் முழுவதும் ராணுவ நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தி, நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கும் நிலங்களை திருப்பி வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் நிர்மலா சீதாராமனை கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த ராணுவ மந்திரி, அனந்த்நாக் ஐகிரவுண்டு நிலத்துக்கான வாடகை பாக்கியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் இந்த விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு தனது வருத்தத்தையும் அவர் முதல்-மந்திரியுடன் பகிர்ந்து கொண்டார். 

Next Story