துக்ளக் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்: பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கடும் விமர்சனம்


துக்ளக் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்: பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 15 Nov 2017 7:40 AM GMT (Updated: 15 Nov 2017 7:40 AM GMT)

துக்ளக் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மோடியை விமர்சித்துள்ளார்.

அகமதாபாத்,

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டதற்காக மோடியை விமர்சித்துள்ள பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, 14 ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்  துக்ளக்கும் 700 ஆண்டுகளுக்கு முன்பே  பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்கா கூறியதாவது:- “ பல அரசர்கள் தங்களுக்கென பிரத்யேக ரூபாயை அறிமுகப்படுத்தினர். சிலர் புதிய ரூபாயை அறிமுகப்படுத்தும் போது, பழைய ரூபாயை புழக்கத்தில் வைத்திருந்தனர். ஆனால், 700 ஆண்டுகளுக்கு முன்னால், முகம்மது பின் துக்ளக், பிரத்யேக ரூபாயை அறிமுகம் செய்தார். அப்போது, முன்பு புழக்கத்தில் இருந்த ரூபாயை செல்லாததாக்கினார். 

ஆகையால், பண மதிப்பிழப்பு நடவடிக்கை 700 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது என்று நாம் சொல்ல முடியும்.  டெல்லியில் இருந்து தலைநகரை தவுலதாபாத்திற்கு மாற்றியதால் தனது செல்வாக்கை துக்ளக் இழந்தார்” என்றார். 14 ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தானை குறுகிய காலம் ஆண்ட முகம்மது பின் துக்ளக், தனது சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் பரவலாக அறியப்படுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், மத்திய அரசை விமர்சித்த யஷ்வந்த் சின்கா,  மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவிட்டது. நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்னவெனில் வேலை வாய்ப்பின்மைதான். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 1,28,000 கோடி நேரடி செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் 1.5 சதவீதம் குறைந்துள்ளதாக நாம் கருதினால் இதைவிட பாதிப்பு அதிகமாக இருக்கும் என நான் நம்புகிறேன். இந்திய பொருளாதாரத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பை இந்த நடவடிக்கை ஏற்படுத்தியிருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்கா, இவர் அண்மைக்காலமாகவே, மத்திய அரசுக்கு  எதிராக கடுமையான வாதங்களை முன்வைத்து வருகிறார். 

Next Story