அடிப்படை சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்

அடிப்படை சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
கொச்சி,
வாட்டர்எய்டு சர்வதேச தொண்டு அமைப்பு ஆனது பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
இந்த அமைப்பு உலகளவில் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம் கிடைப்பது பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அவுட் ஆப் ஆர்டர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படை சுகாதாரமின்றி வசிக்கும் அதிக மக்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் வழியே தீவிர முன்னேற்றம் அடைந்தபொழுதிலும், இந்தியாவில் 73.2 கோடி மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அவர்கள் பொதுவெளி அல்லது பாதுகாப்பற்ற பகுதி அல்லது சுகாதாரமற்ற கழிவறைகளை பயன்படுத்தும் அச்சம் நிறைந்த சூழலிலேயே உள்ளனர். இதில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மோசம் என தெரிவித்துள்ளது.
2017ம் ஆண்டிற்கான உலக கழிவறைகளின் நிலை பற்றிய அந்த அறிக்கையில், 35.5 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள் கழிவறைக்காக காத்திருக்கின்றனர். அவர்களை ஒரு வரிசையில் நிறுத்தினால் பூமியை நான்கு முறை கயிறால் சுற்றும் அளவிற்கு இந்த எண்ணிக்கை உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசாங்க தகவலின்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் 2014 மற்றும் நவம்பர் 2017 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில் 5.2 கோடி வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த திட்டத்தினால் சுகாதார மேம்பாட்டு வசதி சந்தேகமின்றி தீவிர வளர்ச்சி அடைந்துள்ளது. பொது சுகாதார வசதியை முன்னேற்றியதில் டாப் 10ல் இந்தியா உள்ளபொழுதிலும் இன்னும் அதிக தொலைவு எட்ட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு அடுத்த நிலையில் சீனா இந்த பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளது. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியா நாடு 3வது இடம் பிடித்துள்ளது.
உலக அளவில் 3ல் ஒரு மனிதருக்கு கழிவறை இல்லை. 100 கோடிக்கும் கூடுதலான பெண்கள் மற்றும் சிறுமிகள் இந்த நெருக்கடியில் சிக்குகின்றனர்.
இதனால் ஆரோக்கிய குறைவு, குறைந்த கல்வியறிவு, சந்தர்ப்பங்களை இழத்தல், கழிவறையின்றி பொது இடத்திற்கு செல்லும்பொழுது தாக்கப்படும் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.