ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், சின்னமும் நிதிஷ் குமாருக்கு கிடைத்தது


ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், சின்னமும் நிதிஷ் குமாருக்கு கிடைத்தது
x
தினத்தந்தி 17 Nov 2017 11:30 PM GMT (Updated: 17 Nov 2017 9:37 PM GMT)

ஐக்கிய ஜனதாதளம் கட்சியையும், சின்னத்தையும் நிதிஷ் குமாருக்கு வழங்கி தேர்தல் கமி‌ஷன் உத்தரவு பிறப்பித்தது. இதனால் சரத் யாதவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்து இருந்த ஐக்கிய ஜனதாதளம், கடந்த ஜூலை மாதம் அந்த கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்–மந்திரியானார், ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார்.

 கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மேல்–சபை உறுப்பினருமான சரத் யாதவ், நிதிஷ் குமாரின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 நிதிஷ் குமார் தலைமையில் ஒரு அணியாகவும், சரத் யாதவ் தலைமையில் மற்றொரு அணியாகவும் கட்சி பிளவுபட்டது.

பின்னர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியையும், அதன் ‘அம்பு’ சின்னத்தையும் கைப்பற்ற இரு அணிகள் சார்பிலும் தேர்தல் கமி‌ஷனை நாடப்பட்டது.

இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வந்த தேர்தல் கமி‌ஷன், நேற்று தனது முடிவை அறிவித்தது. இதில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், அம்பு சின்னமும் நிதிஷ் குமார் தலைமையிலான அணிக்கு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


Next Story