நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி


நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 15 Jan 2018 10:30 PM GMT (Updated: 15 Jan 2018 9:36 PM GMT)

தமிழ்நாட்டில் நகராட்சிப்பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

புதுடெல்லி,

நகராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த சண்டிகார் மாநிலத்திற்கு மட்டும் செல்லும் என்று கூறி தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அனுமதிக்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

2016-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை தடை செய்யும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஊருக்குள் நகராட்சி பகுதியில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை இந்த உத்தரவு செல்லாது.

அந்த உத்தரவில் ‘மற்ற நகராட்சி பகுதிகள்’ என்பது நாட்டில் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளுக்கும் பொருந்தும். இந்த விளக்கம் அனைத்து நகராட்சி பகுதிகளில் செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கும் செல்லுபடியாகும். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி பகுதிகள் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அனுமதிக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த மூல வழக்கில் மனுதாரரான கே.பாலு தரப்பில் ஆஜரான வக்கீல் தனஞ்ஜயன், தமிழக அரசு, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வரும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி அறிவிக்காமல் அங்கு மதுக்கடைகளை அனுமதித்து உள்ளனர் என்றும், சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவு சண்டிகார் அரசுக்கு மட்டும் செல்லும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு நீதிபதிகள் அந்த உத்தரவு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி பகுதிகளுக்கும் செல்லும் என்று விளக்கம் அளித்தனர்.

Next Story