நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஏ.டிஎம். இயந்திரங்களில் பணத்தட்டுப்பாடு?

நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஏ.டிஎம். இயந்திரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
நாட்டில் கறுப்புப் பணம் , கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதன் மூலம் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. அதன் பின் 50 நாட்களுக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்த நோட்டுக்குப் பதிலாக மத்திய அரசு புதிய வடிவிலான ரூ.2000, ரூ.500 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் உருவான பணத் தட்டுப்பாடு 6 மாதங்களுக்குப் பின்பே மெல்ல மெல்லச் சரியானது. ஆனால், ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெரும் பணத்தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏடிஎம்கள் எல்லாம் பணமில்லாமலும், பணம் இருக்கும் ஒருசில ஏடிஎம்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் பண மதிப்பிழப்பின் நின்றதுபோல் நிற்பதையும் காணமுடிந்தது.
ஐதராபாத் நகரில் பல சில நாட்களாக, பெரும்பாலான ஏ.டி.எம் இயந்திரங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும், இதனால், கடும் சிரமத்திற்குள்ளாகியிருப்பதாகவும் உள்ளூர் வாசிகள் குற்றம் சாட்டினர். அதேபோல், மத்திய பிரதேசத்திலும் 15 நாட்களுக்கும் மேலாக இதேபோன்றதொரு நெருக்கடி உள்ளதாக கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியிலும் பல இடங்களில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் டெல்லி வாசிகள் கருத்துக்களை தெரிவித்ததை காண முடிந்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகானும், சந்தையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு பின்னால், மிகப்பெரும் சதி இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
Related Tags :
Next Story