ராம பக்தர்களை விமர்சனம் செய்து பேஸ்புக்கில் கார்ட்டூன் வெளியிட்ட பெண் பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு

ராம பக்தர்களை விமர்சனம் செய்யும் வகையில் பேஸ்புக்கில் கார்ட்டூன் வெளியிட்ட பெண் பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. #JusticeForAsifa
ஐதராபாத்,
ஜம்மு காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் போராட்டமும் நடைபெற்று வருகிறது. சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து, அவரை மயக்க நிலையில் கோயில் ஒன்றில் அடைத்து வைத்து கும்பல் பலாத்காரம் செய்ததாக புலனாய்வுக் குழு தெரிவிக்கிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பாஜக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோன்று உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பா.ஜனதாவினருக்கு தொடர்பு, இதனால் கைது நடவடிக்கையில் தயக்கம் என்ற விமர்சனங்களும் எழுந்தது.
இவ்விவகாரங்களை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதுபோன்று ராம பக்தர்களை விமர்சனம் செய்யும் வகையில் பேஸ்புக்கில் ஆங்கில பத்திரிக்கையில் பணிபுரியும் ஐதராபாத்தை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டார். இதற்கு இந்து அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்து அமைப்பின் தலைவர் மற்றும் வழக்கறிஞருமான கருணா சாகர் திங்களன்று பெண் செய்தியாளர் சுவாதியின் மீது போலீசில் புகார் தெரிவித்தார். இந்து கடவுள் ராமரின் பக்தர்களை அவமதிப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது போன்றும் அவருடைய கார்ட்டூன் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர் சுவாதியின் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 295 (அ)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவருடைய கார்ட்டூன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உன்னோவ் மற்றும் கதுவா பாலியல் பலாத்கார சம்பவங்களில் தன்னுடைய வேதனையை பதிவு செய்யும் வகையில் சுவாதி வெளியிட்ட கார்ட்டூனில், சீதா, இந்து கடவுள் ராமனிடம், “ நான் மகிழ்ச்சியடைகிறேன், நான் ராவனால் கடத்தப்பட்டேன், உங்கள் பக்தர்களால் அல்ல," என்று சொல்வது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு இந்து அமைப்பினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள கருணா சாகர், “பத்திரிக்கையாளர் சுவாதி தன்னுடைய வேதனையை பகிர்ந்துக் கொள்வதில் எந்தஒரு தவறும் கிடையாது, அவருடைய உணர்வுக்கு மதிப்பளிக்கப்படும். ஆனால் இதில் இந்து கடவுளை இழுக்க வேண்டிய அவசியம் என்ன? பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் இது எப்படி இழுக்கப்படுகிறது? கதுவாவில் ஏதோஒரு பகுதியில் இந்து ஒருவர் குற்றத்தை செய்து இருக்கலாம், ஆனால் இதனை மில்லியன் கணக்காண ராம பக்தர்களை சாடுவதுவதன் மூலம் நியாயப்படுத்துவது எப்படி சரியாகும்?” என கேள்விகளை எழுப்பிஉள்ளார். பத்திரிக்கையாளர் சுவாதி மற்றும் கேரளாவை சேர்ந்த துர்கா மாலதிக்கு எதிராகவும் புகார் தெரிவித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
சைதாபாத் இன்ஸ்பெக்டர் இவ்விவகாரம் தொடர்பாக போதுமான ஆவணங்களை ஒப்படைக்க கேட்டுக்கொண்டு உள்ளார். “குற்றம் சாட்டப்பட்டுவர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்புவோம், பின்னர் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இதற்கிடையே செய்தியாளர் சுவாதி கூறுகையில், என்னுடைய கருத்தை தெரிவிக்கவே கார்ட்டூனை தேர்வு செய்தேன், இது என்னுடைய அடிப்படை உரிமையாகும் என்றார். என்னுடைய கார்ட்டூனுக்கு ஆயிரக்கணக்கில் லைக் போடப்பட்டு உள்ளது. பலர் பகிர்ந்து உள்ளார்கள். என்னுடைய கருத்தை பாராட்டி உள்ளார்கள். அதே சமயம் எனக்கு எதிராக மிகவும் மோசமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது யாரோ எனக்கு எதிராக வழக்குபதிவு செய்து உள்ளார்கள். இதுவரையில் எனக்கு எந்தஒரு நோட்டீசும் வரவில்லை என்றார் சுவாதி.
இதற்கிடையே கருணா, புகார் கொடுத்த பின்னர் தனக்கு பல்வேறு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாகவும், இதனை போலீசில் தெரிவித்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதற்கிடையே பத்திரிக்கையாளர் மீது புகார் பதிவு செய்ததற்கு தெலுங்கானா பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர் அல்லாம் நாராயணா மற்றும் செயலாளர் கராந்தி கிரண் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story