மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டேவின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதல்


மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டேவின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதல்
x
தினத்தந்தி 18 April 2018 2:03 AM GMT (Updated: 18 April 2018 2:03 AM GMT)

மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

மத்திய திறன் மேம்பாட்டு துறை இணை அமைச்சரான அனந்த குமார் ஹெக்டே, நேற்று இரவு கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஹலகேரி என்ற பகுதி அருகே காரில் சென்று கொண்டிருந்துள்ளார். 

இரவு 11.30 மணியளவில் ஹெக்டே சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் இருந்து வந்த லாரி, திடீரென அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பாதுகாப்பு வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. காரில் இருந்த பாதுகாவலர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

 இந்த விபத்து குறித்து தனது டுவிட்டரில் லாரி மற்றும் அதன் டிரைவர் புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் ஹெக்டே, எனது உயிரை குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவமாக இருக்க கூடும் என நான் சந்தேகிக்கிறேன். இந்த சம்பவத்தை பார்க்கும் போது விபத்து போல தெரியவில்லை. ஓட்டுநர் திட்டமிட்டே எங்கள் வாகனத்தின் மீது மோத முயற்சித்துள்ளார். 

ஆனால், பாதுகாப்பு வாகனத்தின் மீது லாரி மோதியுள்ளது. நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்த எனது கார், லாரி  மோதுவதற்கு முன்பே கடந்து சென்று விட்டது. இந்த விபத்து சம்பவத்திற்கு பின்னால், மிகப்பெரிய தொடர்பு இருக்க கூடும். காவல்துறை உரிய விசாரணை செய்து கண்டுபிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story