எனக்கு அன்று கூறிய அட்வைஸை பின்பற்றுங்களேன் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் பதிலடி


எனக்கு அன்று கூறிய அட்வைஸை பின்பற்றுங்களேன் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் பதிலடி
x
தினத்தந்தி 18 April 2018 9:51 AM GMT (Updated: 18 April 2018 9:51 AM GMT)

எனக்கு அன்று கூறிய அட்வைஸை பின்பற்றுங்களேன் என பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதிலடி கொடுத்து உள்ளார். #ManmohanSingh #PMModi

புதுடெல்லி,

காஷ்மீரில் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் உன்னோவில் சிறுமி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீண்ட நாட்கள் மவுனம் காத்த பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங் பேசுகையில், “எனக்கு அன்று கூறிய அட்வைஸை பின்பற்றுங்களேன், அடிக்கடி பேசுங்கள்,” என பதிலடி கொடுத்து உள்ளார். 
 
டெல்லியில் கடந்த வெள்ளியன்று அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடி இறுதியாக இவ்விவகாரத்தில் தன்னுடைய மவுனத்தை கலைத்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. 

பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவின் மகள்களுக்கு நீதி கிடைக்கும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாது” என்றார். 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் நடைபெற்றபோது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மவுனமாக இருக்கிறார், மவுன-மோகன் சிங் என்றெல்லாம் பாரதீய ஜனதா விமர்சனம் செய்தது. இப்போது பிரதமர் மோடி பேசுவதை தவிர்ப்பது தொடர்பாக காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் 2012 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது மோடி பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், “மக்கள் பிரச்னைகளை பற்றி பேசாத அவர் மன்மோகன் சிங் அல்ல, மவுன மோகன் சிங்” என்று கூறியிருந்தார். 

இப்போது பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி மவுனம் காக்கும் விவகாரத்தில் மன்மோகன் சிங் பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி உள்ளார். 

மன்மோகன் சிங் பேசுகையில், “பிரதமர் மோடி எனக்கு அன்று கூறிய அட்வைஸை இன்று பின்பற்றுவார் மற்றும் அடிக்கடி பேசுவார் என்று நான் நினைக்கிறேன். நான் பேசாதது தொடர்பாக அவர் என்னை விமர்சனம் செய்தது தொடர்பாக பத்திரிக்கைகள் மூலம் அறிந்து உள்ளேன். அவர் எனக்கு வழங்கிய அட்வைஸாக நான் பார்க்கிறேன், அதனை அவர் பின்பற்ற வேண்டும்,” என்று கூறிஉள்ளார். பிரதமர் மோடி முன்கூட்டியே பேசாதது, தவறு செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல் அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என மக்களை நினைக்கசெய்யும் என கூறிஉள்ள மன்மோகன் சிங், அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுதொடர்பாக முதலில் இது தொடர்பாக பேச வேண்டும், அப்படியென்றால்தான் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களும் கருத்தை எடுத்துச்செல்வார்கள் என குறிப்பிட்டு உள்ளார். 

பாலியல் பலாத்கார சம்பவங்களில் காங்கிரஸ் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டது என கூறிய மன்மோகன் சிங், 2012 டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை அடுத்து மத்திய காங்கிரஸ் அரசு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டது, சட்டங்களில் மாற்றத்தையும் கொண்டுவந்தது என குறிப்பிட்டார். 

கதுவா பாலியல் பலாத்கார சம்பவத்தை காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்தி சரியாக கையாளுகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய மன்மோகன் சிங், இவ்விவகாரத்தை மேலும் தீவிரமாக அவரால் கையாளமுடியும். விவகாரத்தை முதலிலே அவருடைய கையில் எடுத்து, கடுமையான நிலைப்பாட்டை எடுத்து இருக்கலாம். குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் இல்லாமல் நடவடிக்கை  மேற்கொண்டு இருக்கலாம் என்றார். மேலும், கதுவா பாலியல் பலாத்கார சம்பவத்தில் நடவடிக்கையை மேற்கொள்ள அவருடைய கூட்டணி கட்சியிடம் (பாரதீய ஜனதா) இருந்து அழுத்தம் வந்து இருக்கலாம், எனவே அவர் நடவடிக்கையில் வேகம் குறைத்து இருக்கலாம். 

குறிப்பாக இரு பாரதீய ஜனதா மந்திரிகள் ராஜினாமா செய்து இருந்தாலும், அவருடைய அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே இருந்து உள்ளது எனவும் விமர்சனம் செய்து உள்ளார். 8 வயது சிறுமி கோவிலில் சிறைபிடிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சிக்கரமானது எனவும் குறிப்பிட்டு உள்ளார் மன்மோகன் சிங். 

மூன்று மகள்களின் தந்தையான மன்மோகன் சிங் பேசுகையில், சிறுமி தொடர்பான செய்தியை படிக்கும் போது மிகவும் அழுத்தமாக உணர்ந்தேன். குறிப்பாக சிறுமியின் தந்தை பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசியதை படித்தபோது மிகவும் மனம் உடைந்து போனேன் என்றார்.

சிறுமியின் தந்தை பேசுகையில், “என்னுடைய மகள் மிகவும் சிறிய குழந்தை, அவளுக்கு யார் இந்து, யார் இஸ்லாமியர் என்றெல்லாம் தெரியாது. தன்னுடைய இடது கை எது, வலது கை எது என்றும் தெரியாது,” என குறிப்பிட்டு இருந்தார்.

 சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பா.ஜனதா மந்திரிகள் பங்கேற்று இருந்தார்கள்.  மன்மோகன் சிங் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களை விமர்சனம் செய்கையில், அம்மாநிலங்களில் எல்லாம் அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது, பெண்கள் பாதுகாப்பு, இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் மெத்தனமாக இருக்கிறது என்றார். 

Next Story