துண்டு சீட்டு இல்லாமல் ராகுல் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேல் பேச முடியாது: பாரதீய ஜனதா


துண்டு சீட்டு இல்லாமல் ராகுல் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேல் பேச முடியாது:  பாரதீய ஜனதா
x
தினத்தந்தி 18 April 2018 1:43 PM GMT (Updated: 18 April 2018 1:43 PM GMT)

ராகுல் காந்தியால் துண்டு சீட்டு இல்லாமல் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேல் எங்கேயும் பேச முடியாது என பாரதீய ஜனதா இன்று கூறியுள்ளது. #RahulGandhi #BJP

லக்னோ,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் 3 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதில் 2வது நாளான நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசும்பொழுது, நாடு முழுவதும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.  ஆனால் மக்களவையில் 15 நிமிடங்கள் அவரால் பேச முடிவதில்லை என கூறினார்.

இந்த நிலையில், உத்தர பிரதேச பாரதீய ஜனதாவின் செய்தி தொடர்பு அதிகாரி ராகேஷ் திரிபாதி ராகுல் காந்திக்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் இன்று கூறும்பொழுது, ராகுல் காந்தியால் துண்டு சீட்டு இல்லாமல் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேல் பேச முடியாது.

எந்தவொரு பொது நிகழ்ச்சியிலோ அல்லது நாடாளுமன்றத்தில் கூட ராகுல் காந்தியால் தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு பேச முடியாது.  இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு சவால் விடுவது என்பது நகைப்பிற்குரியது என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், ராகுலை நாடாளுமன்றத்தில் பேச விடாமல் யாரேனும் தடுக்கிறார்கள் என்றால் அது காங்கிரஸ் கட்சியே.  ராகுலிடம் வளர்ச்சி பற்றி மாணவர்கள் கேள்விகள் எழுப்பினால், அவர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் மீது பழிபோடுவதற்கு முயற்சிக்கிறார்.

அமேதி மற்றும் ரேபரேலி என இரு தொகுதிகளிலும் நீண்ட முறை உறுப்பினர்களாக காந்தி குடும்பம் இருந்த நிலையில், ஏன் அடிப்படை வளர்ச்சியில் அவை பின்தங்கி உள்ளது என்பது பற்றி உண்மையில் ராகுல் பதில் அளித்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Next Story