திடீர் மின்வெட்டு ஏற்பட்டால் மக்களுக்கு பணம்: டெல்லி அரசு அதிரடி திட்டம்


திடீர் மின்வெட்டு ஏற்பட்டால் மக்களுக்கு பணம்: டெல்லி அரசு அதிரடி திட்டம்
x
தினத்தந்தி 20 April 2018 5:36 AM GMT (Updated: 20 April 2018 5:36 AM GMT)

அறிவிக்கப்பட்டாத மின்வெட்டு ஏற்பட்டால் மக்களுக்கு பணம் அளிக்கும் திட்டத்துக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். #ArvindKejriwal

புதுடெல்லி,

நடப்பு கோடைக்காலம் முதல், முன்னறிவிப்பு இன்றி மின்வெட்டு ஏற்பட்டால் டெல்லி மக்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு முன்னெடுத்துள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசின்  முடிவுக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலும் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து டெல்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்படுத்தப்படும் போது, நுகர்வோருக்கு இழப்பீட்டை தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தரும் வகையில் புதிய கொள்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கொள்கைத் திட்டத்தின்படி, அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டால் மின்விநியோக நிறுவனங்கள் ஒரு மணி நேரத்திற்குள் மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறும்பட்சத்தில் முதல் இரண்டு மணி நேரத்திற்கு மணிக்கு ரூ.50 வீதம் மின் நுகர்வோருக்கு அபராதமாக மின்சார விநியோக நிறுவனம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் மின்வெட்டு தொடர்ந்தால் மணிக்கு ரூ. 100 அபராதம் அளிக்கப்பட வேண்டும்.

மின்விநியோக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதில் இருந்து தொடக்கத்தில் உள்ள ஒரு மணி நேரத்திற்கு விலக்கு என்பது நாளொன்றுக்கு ஒரு தடவை மட்டுமே. மீண்டும் அதே நுகர்வோருக்கு அதே நாளில் மின்சாரம் வழங்குவதில் தோல்வி ஏற்பட்டால் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்ட தொடக்க நேரத்தில் இருந்து கணக்கிட்டு அபராதம் அளிக்கப்பட வேண்டும்.

தனிப்பட்ட நுகர்வோர் மின் தடையால் பாதிக்கப்பட நேர்ந்தால், அவர் தனது பெயர், நுகர்வோர் கணக்கு எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை குறுந்தகவல், மின்னஞ்சல், செயலி, இணையதளம் வாயிலாக நோ கரன்ட் என்று தலைப்பில் புகாரைப் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, மின் விநியோக நிறுவனம் மின்சாரம் சீரான தேதி, நேரம் குறித்து சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு உறுதிப்படுத்தும் தகவலை அனுப்பும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு தானாகவே உரிய இழப்பீட்டுத் தொகை நுகர்வோர் கணக்கு எண்ணில் வரவு வைக்கப்படும். இது தொடர்பான தகவலும் நுகர்வோருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த அபராதத் தொகையானது நுகர்வோரின் மாதாந்திர மின் கட்டணத்தில் கழிக்கப்படும்.

இழப்பீடுத் தொகை தானாகவே சம்பந்தப்பட்ட மின் விநியோக நிறுவனத்தின் மூலம் வழங்கப்படாவிட்டால் நுகர்வோர் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆர்சி) அல்லது நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பை (சிஜிஆர்எஃப்) அணுகி தீர்வு பெறலாம். இதுபோன்ற வழக்குகளில் இழப்பீடு ரூ.5 ஆயிரம் அல்லது இழப்பீட்டுத் தொகை ஐந்து மடங்கு என இருக்கும்” என்று தெரிவித்தார்.

பிஎஸ்ஈஎஸ் யமுனா பவர் லிமிடெட் , டாடா பவர் டெல்லி மின்பகிர்மான நிறுவனம், பிஎஸ்ஈஎஸ் ராஜ்தானி பவர் லிமிடெட் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்கள் டெல்லியில் மின்விநியோகம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளன. 

Next Story