3 நாள் சுற்றுப்பயணமாக ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று இலங்கை செல்கிறார்


3 நாள் சுற்றுப்பயணமாக ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று இலங்கை செல்கிறார்
x
தினத்தந்தி 13 May 2018 10:30 PM GMT (Updated: 13 May 2018 8:34 PM GMT)

ராணுவ தளபதி பிபின் ராவத் 3 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.

புதுடெல்லி, 

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பல்வேறு வழிகளில் இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல், வர்த்தக மற்றும் கலாசார உறவு பல நூற்றாண்டுகள் பின்னணியைக் கொண்டது ஆகும்.

அண்மைக்காலமாக இந்திய ராணுவம், இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்படுபவர்களுக்கு இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுவது போன்ற பயிற்சிகளையும் அளித்து வருகிறது. கனரக ராணுவ தளவாடங்களையும் இலங்கைக்கு அளித்து உதவி வருகிறது.

இந்த நிலையில் இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் மற்றும் புரிந்துகொள்ளல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தற்போதுள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், ராணுவ ஒத்துழைப்பில் ஒருங்கிணைந்து செயல்படவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இதை உறுதி செய்யும் விதமாக ராணுவ தளபதி பிபின் ராவத் 3 நாள் பயணமாக இன்று(திங்கட்கிழமை) இலங்கைக்கு செல்கிறார். இந்திய ராணுவ தளபதியாக பதவியேற்ற பின்பு அவர் இலங்கை செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த பயணத்தின்போது, கண்டியில் உள்ள சமிக்ஞைகள் பள்ளியின் தொடர்பு ஆய்வகத்தை அவர் தொடங்கிவைக்கிறார். இந்திய ராணுவத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பள்ளியில் இலங்கை ராணுவத்தினருக்கு சமிக்ஞைகளை கையாளுவதில் நுணுக்கமான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதேபோல் தியாதலவா என்னும் இடத்தில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளிக்கும் பிபின் ராவத் செல்கிறார். அங்கு இரு நாடுகளின் ராணுவமும் மேற்கொள்வதற்கான சிறந்த பயிற்சி முறைகளை அவர் பரிமாறிக்கொள்கிறார்.

இதேபோல் கண்டி மற்றும் திரிகோணமலை நகரங்களில் உள்ள இலங்கை ராணுவத்தின் பிராந்திய தளபதிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

இதுபற்றி இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘இந்த பயணத்தின்போது ராவத் இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசுவார்’ என்று குறிப்பிட்டார்.

பிபின் ராவத் தனது இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற 17-ந் தேதி இந்தியா திரும்புகிறார்.

Next Story