மும்பை தாக்குதல் பற்றிய நவாஸ் ஷெரிப் கருத்தால் பாக். ராணுவம் அதிர்ச்சி: உயர் மட்ட குழு கூட்டத்துக்கு அழைப்பு


மும்பை தாக்குதல் பற்றிய நவாஸ் ஷெரிப் கருத்தால் பாக். ராணுவம் அதிர்ச்சி: உயர் மட்ட குழு கூட்டத்துக்கு அழைப்பு
x
தினத்தந்தி 14 May 2018 2:49 AM GMT (Updated: 14 May 2018 2:49 AM GMT)

மும்பை தாக்குதல் பற்றிய நவாஸ் ஷெரிப் கருத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான் உயர்மட்ட குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.#MumbaiAttacks

புதுடெல்லி,

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார்.  மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷெரீப், பொது வெளியில் இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் காரணம் என்று இந்தியா கூறும் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் நவாஸ் ஷெரீப்பின் கூற்று அமைந்தது.

நவாஸ் ஷெரீப்பின் கருத்து பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், நவாஸ் ஷெரீப்பின் கருத்து அமைந்தது.  

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம், தேசிய பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. மும்பை தாக்குதல் குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் குறித்து ஆலோசனை நடத்துமாறும் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸியையும் பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. 


Next Story