நீரவ் மோடி வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்; பஞ்சாப் தேசிய வங்கியின் முன்னாள் தலைவர் பெயர் சேர்ப்பு

நீரவ் மோடியின் நிதி முறைகேடு வழக்கில் பஞ்சாப் தேசிய வங்கியின் முன்னாள் தலைவர் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ. இன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. #NiravModiCase
புதுடெல்லி,
பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி முறைகேடு நடந்துள்ளது என சி.பி.ஐ.யிடம் அந்த வங்கி புகார் அளித்தது. அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட பலர் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் பஞ்சாப் தேசிய வங்கியின் முன்னாள் தலைவர் உஷா அனந்த சுப்ரமணியனிடம் சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்தியது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உஷா இருந்துள்ளார்.
இதுபற்றிய குற்றப்பத்திரிகை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சி.பி.ஐ.யால் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், பஞ்சாப் தேசிய வங்கியின் செயல் இயக்குநர்கள் கே.வி. பிரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண் மற்றும் பொது மேலாளர் (சர்வதேச நடவடிக்கைகள்) நேஹால் ஆஹாத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன.
இதில், நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் நீரவ் மோடி நிறுவனத்தின் செயல் அதிகாரி சுபாஷ் பரப் ஆகியோரது பங்கு பற்றியும் விளக்கமுடன் சி.பி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது. அடிப்படையில், ரூ.6 ஆயிரம் கோடி அளவிலான நிதி முறைகேடு பற்றிய முதல் எப்.ஐ.ஆர். பதிவுடன் இந்த குற்றப்பத்திரிகை தொடர்புடையது.
எனினும், வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்சியின் பங்கு பற்றி அறிக்கையில் எதுவும் விளக்கப்படவில்லை. அது துணை குற்றப்பத்திரிகைகளில் குறிப்பிடப்படும் என கூறப்படுகிறது.
சி.பி.ஐ.யிடம், பஞ்சாப் தேசிய வங்கி புகார் அளிப்பதற்கு முன்பே நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகிய இரண்டு பேரும் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.