சுப்ரீம் கோர்ட்டில் திருத்திய வரைவு திட்டம் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு திடீர் பல்டி


சுப்ரீம் கோர்ட்டில் திருத்திய வரைவு திட்டம் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு திடீர் பல்டி
x
தினத்தந்தி 17 May 2018 11:30 PM GMT (Updated: 17 May 2018 9:59 PM GMT)

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு திடீர் பல்டி அடித்தது. மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை கடந்த 14–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, நீர்வளம் மற்றும் நீர் மேலாண்மையில் செயல்திறன் கொண்ட என்ஜினீயர் தலைமையில் 10 பேர் கொண்ட வாரியம், ஆணையம் அல்லது குழு அமைக்கப்படும். அதன் தலைமையகம் பெங்களூருவில் இயங்கும்; காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

சம்பந்தப்பட்ட மாநில அரசுகளில் ஒன்று, காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் கடந்த காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்து சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 16–ந் தேதியன்று வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கு, மத்திய அரசின் உதவியை நாடலாம். இதில் மத்திய அரசின் முடிவே இறுதியானது. இதற்கு அனைத்து மாநிலங்களும் கட்டுப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

வரைவு திட்ட நகல்கள், சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டன. அவற்றின்மீது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அந்த மாநிலங்கள் 16–ந் தேதி தங்கள் கருத்தை தெரிவித்தன.

தமிழக அரசு தரப்பில் கோதாவரி மேலாண்மை வாரியம் போல காவிரி மேலாண்மை வாரியம் என்று அழைக்கவேண்டும்; அதன் தலைமையகத்தை டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை பெங்களூருவிலும் அமைக்கலாம் என்று கூறப்பட்டது.

கேரளா தரப்பில் தண்ணீர் திறக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்காமல் அமைப்பிடமே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக்கொண்டன.

கர்நாடகமோ, தேர்தல் முடிந்து, புதிய அரசு அமையாத நிலையில், வழக்கை ஜூலை முதல் வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.

விசாரணையின் இறுதியில் இந்த அமைப்பின் பெயர், அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படும் இடம் மற்றும் முடிவை செயல்படுத்துவதில் அமைப்புக்கு இருக்கும் அதிகாரம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்து, புதிய வரைவு அறிக்கையை நேற்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் நேற்று தாக்கல் செய்தார். அதன் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டன.

முதலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வந்த மத்திய அரசு, இப்போது திடீரென பல்டி அடித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என திருத்தப்பட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதன் தலைமையகம் டெல்லியில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளில் ஏதேனும் ஒன்று காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் கடந்த காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் சில மாற்றங்கள் செய்து சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி 16–ந் தேதி வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசின் உதவியை நாடலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.

திருத்தப்பட்ட வரைவு அறிக்கையில், அமைப்பின் பெயர் ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ (Cauvery Water Authority) என்று திருத்தப்பட்டதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே ஆட்சேபம் தெரிவித்தார். இதற்கு அட்டார்னி ஜெனரல். ‘‘ காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்ற இந்த அமைப்பு காவிரி மேலாண்மை வாரியம் என்பதை விட அதிகாரம் உள்ள அமைப்பாகத்தான் இருக்கும்; இந்த அமைப்பின் அதிகார வரம்புகள் எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது. வாரியம் என்பதற்கு பதிலாக ஆணையம் என்று பெயரில் மட்டுமே மாற்றம் உள்ளது’’ என்று கூறினார்.

உடனே சேகர் நாப்டே, ‘‘ஆரம்பத்தில் இருந்தே மத்திய அரசுக்கு வாரியம் என்ற பெயரே சுத்தமாக பிடிக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக தொடர்ந்து அவர்கள் இதனை மறுத்தே வந்திருக்கிறார்கள். அதனால் தான் தற்போது ஆணையம் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். வாரியம் என்று இருப்பதுதான் சரியாக இருக்கும்’’ என்று கூறினார்.

கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், ‘‘மத்திய அரசின் வரைவு திட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளின் கொள்ளளவு, அந்த மாநிலத்துக்கு அந்தந்த மாதத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவை, தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும், இருப்பு எவ்வளவு என்ற விவரங்களை இந்த அமைப்புக்கு ஒவ்வொரு மாதமும் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தவறானது. ஏனென்றால், எங்களிடம் உள்ள தண்ணீரை நாங்கள் எப்படி செலவழிக்க வேண்டும், எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் இந்த அமைப்பு தலையிட முடியாது. தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை நாங்கள் திறந்து விடுகிறோமா, இல்லையா என்பதை கண்காணிப்பது மட்டுமே இந்த அமைப்பின் வேலை. மற்றபடி அவர்களுக்கு எந்த அதிகாரமும் அளிக்க தேவை இல்லை என்ற முறையில் திருத்தம் செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

மேலும், இது போன்று விவரங்களை மாதாந்திர அடிப்படையில் தாக்கல் செய்வது பற்றாக்குறை ஆண்டுகளில் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டிலும் அப்படி தாக்கல் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

இதற்கு தமிழ்நாடு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே மற்றும் வக்கீல் ஜி.உமாபதி ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். சேகர் நாப்டே, ‘‘இது போன்ற அதிகாரத்தை இந்த அமைப்புக்கு வழங்கவில்லை என்றால், கர்நாடக அரசு எல்லா ஆண்டுகளையும் பற்றாக்குறை ஆண்டு என்று அறிவித்து தண்ணீர் திறந்து விடாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, கர்நாடக அரசு வேண்டும் என்றே இந்த திட்டத்துக்கும், அமைப்பு உருவாகும் பணிக்கும் முட்டுக்கட்டை போடுவதற்கு இது போல எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனை சுப்ரீம் கோர்ட்டு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதை யாரும் தடுக்க முடியாத வகையில் முழு அதிகாரம் கொண்டதாக இந்த அமைப்பு இருந்தால்தான் தமிழகத்துக்கு பல ஆண்டுகளாக மறுக்கப்பட்ட நியாயம் கிடைக்கும்’’ என்று கூறினார்.

ஷியாம் திவான் தொடர்ந்து, ‘‘அணைகள் மீதான கட்டுப்பாட்டை இந்த அமைப்புக்கு வழங்கி இருப்பது கடந்த பிப்ரவரி 16–ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இல்லை. ஒரு மாநிலம் தங்கள் மாநிலத்துக்குள் தண்ணீரை ஒழுங்குபடுத்தவும் பயன்படுத்தவும் உள்ள அதிகாரத்தை இந்தப் பிரிவு பறித்துக் கொள்கிறது’’ என்றார்.

கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா, கர்நாடகா அரசின் வாதத்தை ஏற்பதாக கூறினார்.

அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘‘காவிரி படுகை பற்றாக்குறை உள்ள படுகை ஆகும். எனவே, தண்ணீரின் தேவையை முறையாக கணக்கிட்டால் ஒழிய, தண்ணீர் திறப்பை ஒழுங்குபடுத்த முடியாது. எனவேதான் வரைவு செயல்திட்டத்தில் இந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘வரைவு செயல் திட்டம் மீதான தீர்ப்பு நாளை (இன்று) மாலை அல்லது 22–ந் தேதியன்று வழங்கப்படும். இனி எந்தவிதமான கருத்துக்களையும், வாதங்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அந்த தீர்ப்பு ஏற்கனவே கடந்த பிப்ரவரி 16–ந் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில்தான் இருக்கும். அதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது’’ என்று அறிவித்தனர்.

திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவு செயல்திட்டத்தின் இறுதி வடிவத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகு இந்த செயல்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வரும்.


Next Story