கர்நாடகாவில் சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் சர்ச்சை, காங்கிரஸ் எதிர்ப்பு

கர்நாடகாவில் சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. #KGBopaiah #Congress
பெங்களூரு,
தொங்கு சட்டசபை அமைந்த கர்நாடகாவில் பெரும்பான்மையில்லாத பா.ஜனதாவை, தனிப்பெரும் கட்சியென ஆளுநர் அழைப்பு விடுத்த விவகாரத்திற்கு எதிராக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நாளை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு உத்தரவிட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் தங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்வதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி. தேஷ்பாண்டே மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த உமேஷ் கர்தி பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கே.ஜி. போபையாவை ஆளுநர் வஜுபாய் வாலா தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்து உள்ளார். போபையா 2009 முதல் 2013 வரையில் கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக இருந்தவர்.
வயது மூப்பு அடிப்படையில் 8 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி. தேஷ்பாண்டேவிற்கு முன்னுரிமையை கொடுக்க வேண்டும். ஆனால் தற்காலிக சபாநாயகராக கே.ஜி. போபையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நியமனம் செய்து உள்ளார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் தற்காலிக சபாநாயகரின் பொறுப்பானது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த போபையாவை சபாநாயகர் ஆக்கியது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தற்காலிக சபாநாயகர் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பை நடத்த வேண்டும். கோர்ட்டு உத்தரவின்படி பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக குரல் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா அல்லது வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்பது தொடர்பாக சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும். தற்காலிக சபாநாயகரின் அதிகாரம் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருக்கவே உதவும் வகையில் இருக்கும், சட்டத்தின் தடைகளை தடுக்க உதவுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவின் நியமனத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே விதிமுறைகளுக்குட்பட்டே கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா நியமனம் செய்யப்பட்டு உள்ளது. தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் காங்கிரஸ் வேண்டுமென்றே ஆட்சேபணை தெரிவிக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறிஉள்ளார்.
Related Tags :
Next Story