கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. #Trustvote
பெங்களூரு,
கர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த
நிலையில் 104 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதாவை ஆட்சி அமைக்குமாறு கூறி கவர்னர் அழைப்பு விடுத்தார். மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள், கவர்னரின் முடிவை எதிர்த்து உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்துவிட்டது. இருந்த போதிலும், கர்நாடக சட்டசபையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்படி, இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பாரதீய ஜனதா -காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என பரஸ்பரம் தெரிவித்து வருகின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவை அறிய கர்நாடகம் மட்டும் இல்லாது, நாடு முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டுமெனில் பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள் உள்ளன அவை என்ன என்பதை காணலாம்
1.காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்கள் கொறடா உத்தரவை மீறி பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு அளிக்க வேண்டும்.
2.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் இருக்க வேண்டும், வாக்களிக்காமல் இருந்தால், அவையின் பலம் குறையும். அவையின் பலம் மற்றும் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில்தான் பெரும்பான்மை முடிவு செய்யப்படும்.
3.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு வராமல் தவிர்க்க வேண்டும், உறுப்பினர்கள் வாராவிட்டல், அவையின் பலம் குறையும், இதன் மூலம் பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்ப முடியும்,
4. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், சபாநாயகர் விசாரணைக்கு பிறகே ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால், இதில் சில சிக்கல்கள் உள்ளன.
5. கட்சியோ அல்லது சில குழுவினரோ கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு அவை நடக்காமல் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.
மேற்கூறிய ஐந்தில் ஏதேனும், ஒன்று நடந்தால் மட்டுமே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை தக்க வைக்க முடியும், இல்லாவிடில் அவர் தனது பதவியை இழப்பார். இந்த தகவல்களை ஆங்கில செய்தி தொலைக்காட்சியான என்.டி.டிவி வெளியிட்டுள்ளது.
221 உறுப்பினர்களை கொண்டுள்ள கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமெனில் 111 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு 103 உறுப்பினர்கள் ஆதரவும் எதிர்க்கட்சிகளுக்கு 115 உறுப்பினர்கள் ஆதரவும் உள்ளதாக தெரிகிறது.
Related Tags :
Next Story