கர்நாடக விவசாயிகளுக்காக இறுதி மூச்சு உள்ளவரை சேவை செய்வேன்; எடியூரப்பா பேச்சு


கர்நாடக விவசாயிகளுக்காக இறுதி மூச்சு உள்ளவரை சேவை செய்வேன்; எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 19 May 2018 10:56 AM GMT (Updated: 19 May 2018 10:56 AM GMT)

கர்நாடக விவசாயிகளுக்காக இறுதி மூச்சு உள்ளவரை சேவை செய்வேன் என சட்டப்பேரவையில் எடியூரப்பா பேசினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.  அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார்.

ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில், உணவு இடைவேளைக்காக ஒத்தி வைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை மதியம் 3.30 மணியளவில் மீண்டும் கூடியது.  இதில் மீதமுள்ள அவை உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.  கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் சித்தராமையா மகன் யதீந்திராவும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று கொண்டார்.  அதன்பின் முதல் அமைச்சர் எடியூரப்பா அவையில் பேசினார்.

அவர் பேசும்பொழுது, என் மாநில மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன்.  மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் என்னை அர்ப்பணிக்க தயாராக உள்ளேன்.

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆண்டு இருந்தபொழுதிலும் மோடி எந்த வேற்றுமையையும் காட்டவில்லை.

கர்நாடக மக்கள் மதிப்பு, மரியாதையுடன் வாழ நினைக்கின்றனர்.  மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் ஒன்று சேர்ந்துள்ளனர்.  விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.

பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்த கர்நாடக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில் எங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் சுற்றி மக்களின் தேவையை அறிந்துள்ளேன்.  மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர், நீதி வேண்டும் என்று நினைக்கின்றனர்.  இறுதி மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்காக சேவை செய்வேன் என கூறியுள்ளார்.

Next Story