மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 7 பேர் பலி


மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 7 பேர் பலி
x
தினத்தந்தி 20 May 2018 10:45 PM GMT (Updated: 20 May 2018 10:19 PM GMT)

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி பாதுகாப்பு படையினர் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜகதல்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஆகும். இதனால் இந்த மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட அரசு தொடர்பான அனைத்து முக்கிய கட்டுமான பணிகளும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன்தான் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தண்டேவாடா மாவட்டத்தின் கிராண்டுல் நகர போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சோல்னார் கிராம பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கிராண்டுல் நகரில் இருந்து நேற்று காலை பாதுகாப்பு படையினர் ஒரு வாகனத்தில் புறப்பட்டனர். அவர்களுக்கு முன்பாக கட்டுமான பணிகளுக்குத் தேவையான பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்னொரு வாகனம் சென்றது.

காலை 11.40 மணி அளவில் அந்த வாகனங்கள் சோல்னார் கிராமம் அருகே சென்றன. அப்போது அங்குள்ள புதர் பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் சாலையில் நடுவே புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை வெடிக்கச் செய்தனர். அப்போது அங்கு 10 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினரின் வாகனம் சிக்கி வெடித்துச் சிதறியது. அதில் இருந்தவர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒரு வீரர் பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் 6 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 6 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

இதற்கிடையே, கண்ணிவெடி தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரின் வாகனங்களில் இருந்த ஆயுதங்களை கொள்ளையடித்து விட்டு காட்டுப் பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர்.

இந்த பகுதியில் உள்ள படே பச்சேலி என்னும் இடத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) கிராம மக்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியில் மாநில முதல்-மந்திரி ராமன் சிங் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story