காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை காவல்துறையிடம் ஒப்படைத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.!


காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை காவல்துறையிடம் ஒப்படைத்த பா.ஜனதா எம்.எல்.ஏ.!
x
தினத்தந்தி 4 Sep 2018 9:33 AM GMT (Updated: 4 Sep 2018 9:34 AM GMT)

காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த மகனை பா.ஜனதா எம்.எல்.ஏ. காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

போபால்,

பா.ஜனதா ஆட்சி செய்துவரும் மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ. உமாதேவி காதிக்கின் மகன், பிரின்ஸ்தீப் லால்சந்த் காக்திக் பேஸ்புக் தளத்தில் சர்ச்சைக்குரிய தகவலை பதிவு செய்து இருந்தார். அம்மாநில காங்கிரஸ் தலைவரான ஜோதிரத்யா சிந்தியாவை சுட்டுக் கொலை செய்வதாக குறிப்பிட்டு இருந்தார். நாளை காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஹட்டாவில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஹட்டாவிற்கு வந்தால் சிந்தியாவை சுட்டுக் கொல்வேன், ஒன்று சிந்தியா உயிரிழக்க வேண்டும் அல்லது நான் உயிரிழக்க வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார். 

இதற்கு பதிலளித்த சிந்தியா, “காங்கிரஸை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று பா.ஜனதாவும் சிவராஜ்சிங் சவுகானும் விரும்புகிறார்கள். இதுபோன்ற அழுத்தத்திற்கு எல்லாம் எங்களுடைய குடும்பம் பயப்படாது. அவர்கள் இதற்கு முன்னதாகவும் இதுபோன்று பேசியுள்ளனர். அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்யட்டும். ஒருபோதும் பயப்பட மாட்டோம்,” என குறிப்பிட்டு இருந்தார்.

இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாகிய நிலையில் “என்னுடைய மகன் சிறையில் தான் இருக்க வேண்டும்,” என்று எம்.எல்.ஏ. உமா தேவி கூறியுள்ளார். 

மகனை காவல்நிலையத்தில் கொண்டுவிட்ட உமாதேவி, இதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Next Story