நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட காங்கிரஸ் குழுக்களுக்கு நிர்வாகிகள் நியமனம்


நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட காங்கிரஸ் குழுக்களுக்கு நிர்வாகிகள் நியமனம்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:15 PM GMT (Updated: 15 Sep 2018 8:51 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட காங்கிரஸ் குழுக்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக முக்கிய குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மற்றும் விளம்பர குழு என 3 குழுக்களை கட்சித்தலைமை கடந்த மாதம் அமைத்தது.

இந்த குழுக்களுக்கான உறுப்பினர்கள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டனர். இந்த குழுக்களுக்கு தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை கட்சி, நேற்று அறிவித்தது.

அதன்படி மூத்த தலைவர்கள் 9 பேரை கொண்ட முக்கிய குழுவுக்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும், விளம்பர குழுவுக்கு மற்றொரு முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதைப்போல முக்கிய குழுவுக்கு ஒருங்கிணைப்பாளராக ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் ராஜீவ் கவுடா, பவன் கேரா ஆகியோர் முறையே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு ஆகியவற்றுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

Next Story