ஆம்புலன்ஸ் இல்லாததால் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போலீஸ்காரர்!


ஆம்புலன்ஸ் இல்லாததால் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போலீஸ்காரர்!
x
தினத்தந்தி 17 Sep 2018 9:37 AM GMT (Updated: 17 Sep 2018 9:37 AM GMT)

ஆம்புலன்ஸ் இல்லாததால் பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணியை போலீஸ்காரர் ஒருவர் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த மனிதாபிமானம் மிக்க சம்பவம் நடந்துள்ளது.

லக்னோ,

இந்தியா முழுவதும் மருத்துவ அலட்சியம் தொடர்பான செய்திகள் வெளியாவது ஒன்றும் புதியது கிடையாது. மாநில அரசுக்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டாலும், அரசு மருத்துவமனைகளின் செயல் மாறாத நிலையிலே உள்ளது. வட மாநிலங்களில் இந்நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. இருப்பினும் சிலர் செய்யும் மனிதாபிமான உதவிகளும் பாராட்டத்தக்க வகையில் மனம்நிறைய செய்கிறது.

மதுராவின் ரெயில் நிலையம் அருகே கன்டோன்மென்ட் பகுதியில் பாவ்னா என்ற கர்ப்பிணி பெண் இடுப்பு வலியுடன் தவித்துள்ளார். அவருடைய கணவர் பதற்றத்துடன் உதவிக்காகக் காத்திருந்தார். ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்தார். இதனை அங்கிருந்த போலீஸ் அதிகாரி சோனு ராஜவுரா பார்த்துக்கொண்டிருந்தார். அவரும் மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், உடனடியாக அனுப்ப முடியாது என மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து நேரத்தை சற்றும் தாமதிக்காமல் சோனு ராஜவுரா, பாவ்னாவை அங்கிருந்த சைக்கிள் ரிச்சாவில் வைத்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சென்றால் மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் கிடையாது, இதனையடுத்து அவரே பாவ்னாவை தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு பாவ்னாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்ட பலரும் போலீஸ்காரரை பாராட்டி வருகிறார்கள். மாநிலத்தி மருத்துவ சேவையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Next Story