கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு, விரைவில் சம்மன்


கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு, விரைவில் சம்மன்
x
தினத்தந்தி 18 Sep 2018 10:29 AM GMT (Updated: 2018-09-18T15:59:12+05:30)

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு வழகுப்பதிவு செய்துள்ளது, விரைவில் சம்மன் விடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரியாக இருப்பவர் டி.கே.சிவக்குமார். 2017-ல் குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பணி மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. அப்போது டி.கே.சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பெங்களூரு மற்றும் டெல்லியில் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 20 கோடி சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட 5 பேர் திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் டெல்லியில் இருந்து பெங்களூருவிற்கு கணக்கில்வராத பணத்தை கொண்டுவர ஆட்கள் மற்றும் பரிமாற்ற வசதிகள் என ஒரு ஹவாலா நெட்வொர்க் போன்ற கட்டமைப்பை சிவக்குமார் ஏற்படுத்தியுள்ளார் எனவும் குற்றம் சாட்டியுள்ளது. 

வருமான வரி ஏய்ப்பு வழக்கில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. வருமான வரித்துறை என்னை இலக்காக்குகிறது என டி.கே. சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே வருமான வரித்துறையின் குற்றச்சாட்டின்படி விசாரணையை அமலாக்கப்பிரிவும் கையில் எடுத்துள்ளது. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பண மோசடி வழக்கை பதிவு செய்துள்ளனர். விரைவில் சம்மன் விடுக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story