கோவா சட்டமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; காங்கிரஸ் கட்சி

கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாரதீய ஜனதா தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பனாஜி,
கோவாவில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் (வயது 62) தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
அவர் கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர் ஜூன் மாதம் நாடு திரும்பினார். அதன்பிறகு மருத்துவ பரிசோதனைக்காக, அமெரிக்காவுக்கு மீண்டும் கடந்த செப்டம்பரில் சென்றிருந்த பாரிக்கர் சிகிச்சை முடிந்து கடந்த 7ந்தேதி அங்கிருந்து நாடு திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த வியாழ கிழமை அவர் கண்டோலிம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் சேர்க்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த 15ந்தேதி மதியம் சிறப்பு விமானம் ஒன்றில் புதுடெல்லி சென்ற அவர் அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து பாரிக்கர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டசபையின் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி 16 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். ஆனால் அங்கு ஆளுநர் மிருதுளா சின்ஹா இல்லை. இதனால் அவர்களால் ஆளுநரை சந்திக்க முடியவில்லை. இதனை அடுத்து எழுத்துப்பூர்வ தகவல் அடங்கிய ஆவணத்தினை வழங்கினர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு கவ்லேகர் அளித்துள்ள பேட்டியில், ஆளும் கூட்டணியில் உட்கட்சி பூசல் மற்றும் உடல்நலமற்ற பாரிக்கர் ஆகியவற்றால் மாநில சட்டசபையை கலைக்க கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால் சட்டசபையை ஆளுநர் கலைக்க கூடாது என எங்களது கட்சி வலியுறுத்தியுள்ளது.
எங்களுக்கு மற்ற கட்சி உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆளுநர் ஒரு வாய்ப்பு அளித்தால் எங்களால் ஆட்சி அமைக்க முடியும். நாங்கள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என கூறினார்.
இந்த நிலையில், கவ்லேகர் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து, கோவா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாரதீய ஜனதா தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கவ்லேகர், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பாரதீய ஜனதா தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவர்களை விட நாங்கள் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளோம் என தெரிவிப்போம் என கூறினார்.
ஒன்றரை வருடத்திற்குள் மறுதேர்தல் நடத்த நாங்கள் விரும்பவில்லை. பாரதீய ஜனதா தலைமையிலான அரசு ஆட்சி நடத்த முடியவில்லை என்றால் ஆட்சியை நடத்த நாங்கள் தயார் என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story