சாதி மறுப்பு திருமணம்; தம்பதி மீது பெண்ணின் தந்தை அரிவாளால் வெட்டி தாக்குதல்


சாதி மறுப்பு திருமணம்; தம்பதி மீது பெண்ணின் தந்தை அரிவாளால் வெட்டி தாக்குதல்
x
தினத்தந்தி 19 Sep 2018 3:11 PM GMT (Updated: 2018-09-19T21:05:34+05:30)

தெலுங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி மீது பெண்ணின் தந்தை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வரும் தம்பதி சந்தீப் (வயது 21), மாதவி (வயது 20).  இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த வாரம் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.  ஆனால் பெண்ணின் தந்தை மனோகர் சாரி, தாழ்த்தப்பட்ட இளைஞரை தனது மகள் திருமணம் செய்து கொண்டாள் என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று மதியம் எர்ரகாடா பகுதியில் கோகுல் தியேட்டர் அருகே தன்னை வந்து சந்திக்கும்படி தம்பதியிடம் மனோகர் சாரி கேட்டு கொண்டுள்ளார்.  அதன்படி அவர்கள் 2 பேரும் இரு சக்கர வாகனம் ஒன்றில் அங்கு வந்துள்ளனர்.

அவர்களிருவரும் வாகனத்தில் அமர்ந்திருந்த நிலையில் அருகே வந்த சாரி, அரிவாளால் வெட்டி கடுமையாக தாக்கி உள்ளார்.  அங்கிருந்த மற்றொரு நபர் சாரியை தடுக்கும் வகையில் அவரை மிதித்து தள்ளியுள்ளார்.  இந்த சம்பவம் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது.  தம்பதி இருவரும் தாக்குதலில் படுகாயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்திற்கு பின் சாரி அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சமீபத்தில் தெலுங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த அம்ருதா, பிரனாய் தம்பதியில், பெண்ணின் தந்தை திட்டமிட்டு கூலி படை உதவியுடன் பிரனாயை கொலை செய்த நிலையில் மீண்டும் இதுபோன்ற மற்றொரு சம்பவம் அங்கு நடந்துள்ளது.


Next Story