ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - ராஜ்நாத்சிங்


ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - ராஜ்நாத்சிங்
x
தினத்தந்தி 22 Sep 2018 11:08 AM GMT (Updated: 2018-09-22T16:45:25+05:30)

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். #RajnathSingh

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் ‘டசால்த்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி அரசு 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதற்கான ஒப்பந்தம் அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே இந்தியா வந்தபோது மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியாவில் ரபேல் போர் விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் பணிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அந்நாட்டின் மீடியாபார்ட் என்னும் இணையதளத்துக்கு பேட்டி அளித்தார்.

அதில், “உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக எங்களுக்கு வேறு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான பணிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டதாக ஹாலண்டே தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தெரிவித்துள்ள கருத்தில், 

ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் குற்றச்சாட்டு குறித்து, பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் . அனில் அம்பானிக்கு உதவி செய்வதற்காக பெரும் முறைகேடு நடந்திருக்கிறது. பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது:

ரபேல் போர்விமானம் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story