ரபேல் ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல் - பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு


ரபேல் ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல் - பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Sep 2018 12:26 PM GMT (Updated: 2018-09-23T17:56:02+05:30)

ரபேல் ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல் என சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,


பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016–ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரத்தால் அரசியலில் சூடுபிடித்து உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடும் வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்வலரும், சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் பேசுகையில், “ரபேல் ஒப்பந்தம் இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல்,” என குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் பூஷண்,  “இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பாதுகாப்பு ஊழல் மட்டும் கிடையாது, இந்தியாவின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு 126 விமானங்கள் தேவை. ஆனால் 36 விமானங்களுக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதா அரசு தேசிய பாதுகாப்பை முழுவதும் சமரசம் செய்துள்ளது, இந்திய விமானப்படையை சிதைத்துள்ளது. மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸை (எச்ஏஎல்) அவமதிப்பு செய்துள்ளது.

 அவர்கள் உண்மையை மறைக்க மட்டுமே முயற்சி செய்கிறார்கள், இவ்விவகாரத்தில் உடனடியாக கூட்டு பாராளுமன்ற குழு விசாரணையை தொடங்க வேண்டும், அரசு அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்,” என கூறியுள்ளார். 

Next Story