ரூ.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி: தொழில் அதிபர் நிதின் சந்தேசரா நைஜீரியா தப்பியிருக்கலாம் என தகவல்


ரூ.5 ஆயிரம் கோடி வங்கி மோசடி: தொழில் அதிபர் நிதின் சந்தேசரா நைஜீரியா தப்பியிருக்கலாம் என தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2018 7:17 AM GMT (Updated: 24 Sep 2018 7:17 AM GMT)

ரூ.5 ஆயிரம் கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் நிதின் சந்தேசரா நைஜீரியா தப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது.

புதுடெல்லி,

குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வந்தார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து கம்பெனி இயக்குனர்கள், ஆடிட்டர் உள்ளிட்ட சிலரை கைது செய்தது. அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.  

மேலும் மருந்து கம்பெனியின் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க பிரிவு கடந்த ஜூன் மாதம் முடக்கியது. தலைமறைவாக இருந்த நிதின் சந்தேசராவுக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. சிபிஐயும் அவரைத் தேடி வருகிறது.இதனிடையே நிதின் சந்தேசரா துபாயில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்க பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் நிதின் சந்தேசரா தற்போது துபாயில் இல்லை என்றும், அவர் தன்  குடும்பத்தினருடன் நைஜீரியா நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியாவுடன் கைதிகள் ஒப்படைப்பு ஒப்பந்தமோ பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தமோ இல்லாததால் அங்கிருந்து நிதினை இந்தியாவுக்கு கொண்டு வருவது கடினம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே துபாயில் நிதின் சந்தேசரா கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும், இந்த தகவல் வெளியாவதற்கு முன்பாகவே அவர் நைஜீரியாவுக்கு சென்றுவிட்டதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். 

இருந்த போதிலும், சந்தர்சேனாவை பார்த்தால் கைது செய்ய வேண்டும் என்று  ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விசாரணை முகமைகள் முறையான கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. சந்தர்சேனாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க தேவையான நடவடிக்கைகளையும் விசாரணை முகமைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 


Next Story