டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் புகுந்த குரங்கு; பயணிகள் அச்சம்


டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் புகுந்த குரங்கு; பயணிகள் அச்சம்
x
தினத்தந்தி 24 Sep 2018 12:42 PM GMT (Updated: 24 Sep 2018 12:42 PM GMT)

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிங்க் லைன் பிரிவில் குரங்கு ஒன்று அலைந்து திரிந்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

டெல்லியில் ஆசாத்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைந்துள்ளது.  இந்த புதிய ரெயில் நிலைய கட்டிடம் பூமிக்கு அடியில் அமைந்துள்ளதுடன், பழைய ரெயில் நிலையத்துடன் இணைக்கும் வகையிலான வசதியையும் கொண்டது.

இங்குள்ள பிங்க் லைன் பிரிவு வடக்கு டெல்லியில் உள்ள மஜ்லிஸ் பூங்கா மற்றும் தெற்கு டெல்லியில் உள்ள லஜ்பத் நகர் ஆகிய பகுதிகளை இணைக்கிறது.  ஆசாத்பூர் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதி.  இந்த ரெயில் நிலையத்திற்குள் இன்று காலை குரங்கு ஒன்று புகுந்தது.  அது நுழைவு பகுதி வழியே அலைந்து திரிந்து சென்றது.

இதனால் அங்கிருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.  சிலர் ஆச்சரியமுடன் அதனை கண்டனர்.  இதனை அடுத்து மத்திய தொழிற்பாதுகாப்பு படை மற்றும் டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

கடந்த வருடம் செப்டம்பரில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் புகுந்த குரங்கு ஒன்று மெட்ரோ ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு சென்றது.  பின்னர் சீட் ஒன்றில் அமர்ந்தது.  இது வீடியோவாக வெளியாகி வைரலானது.


Next Story