ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் - நிர்மலா சீதாராமன்


ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் - நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 24 Sep 2018 3:06 PM GMT (Updated: 2018-09-24T20:36:52+05:30)

ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


புதுடெல்லி,  

ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான வாக்குவாதம் தொடர்கிறது. மத்திய அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள், இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே பா.ஜனதாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ரபேல் விவகாரத்தில் காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்று கூறியுள்ளார். 
 
நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரபேல் விவகாரத்தில், காங்கிரஸ் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், காங்கிரசின் அடிப்படையற்ற, பொய் பிரசாரம் தொடர்ந்து வருகிறது. இதை எதிர்கொள்வதை தவிர, வேறு வழி இல்லை. அந்த பிரசாரத்தை முறியடிப்போம். நாடு முழுவதும் சுற்றி வந்து உண்மையை சொல்வோம். காங்கிரஸ் கட்சியில் விரக்தி நிலவுகிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் அரசு எவ்வித களங்கமும் இல்லாமல் இருப்பதை ஒரு பொருட்டாகவே கருதாமல், பொய் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது என கூறியுள்ளார். 

Next Story