உள்ளாட்சி தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: ஜம்மு காஷ்மீர் தலைமைச்செயலாளர் உறுதி


உள்ளாட்சி தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்: ஜம்மு காஷ்மீர் தலைமைச்செயலாளர் உறுதி
x
தினத்தந்தி 26 Sep 2018 2:52 AM GMT (Updated: 2018-09-26T08:22:23+05:30)

உள்ளாட்சி தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் தலைமைச்செயலாளர் உறுதி அளித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல் தனித்தனியே நடைபெறவுள்ளது. அக்டோபர் 1 முதல் 5-ஆம் தேதி வரை 4 கட்டங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும், நவம்பர் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 4 வரை 8 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது, ராணுவத்தினருக்கு எதிராக இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்றவற்றால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது தவிர பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. எனவே, உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவது மாநில அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும் மாநிலத்தில் இப்போது ஆளுநர் ஆட்சிதான் உள்ளது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த மாநில தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியம், “உள்ளாட்சித் தேர்தலுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலுக்காக 400 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர்  கூடுதலாக வரை வழைக்கப்பட உள்ளனர். இதுதவிர மாநிலத்தில் ஏற்கெனவே உள்ள துணை ராணுவப்படையினரும், போலீஸாரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். வேட்பாளர்களுக்கும், வெற்றி பெறுபவர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்

மாநிலத்தில் உள்ள சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தாலும், பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் தேர்தலில் களமிறங்குகின்றன. ஜம்முவில் வீதி வீதியாக தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது என்றார். உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று பிரிவினைவாதத் தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


Next Story