கற்பழிப்பு புகார்: பெண் டைரக்டரிடம் ஒரு ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு - நடிகர் அலோக்நாத் நடவடிக்கை


கற்பழிப்பு புகார்: பெண் டைரக்டரிடம் ஒரு ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு - நடிகர் அலோக்நாத் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2018 10:30 PM GMT (Updated: 15 Oct 2018 8:16 PM GMT)

கற்பழிப்பு புகார் கூறிய பெண் டைரக்டரிடம், ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் அலோக்நாத் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் அலோக்நாத். இவர் பல படங்களில் தந்தை வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மீது இந்திப்பட பெண் டைரக்டரும், எழுத்தாளருமான வின்டா நந்தா சமீபத்தில் கற்பழிப்பு புகார் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து நடிகர் அலோக்நாத் மற்றும் அவரது மனைவி ஆசு ஆகியோர் மும்பையில் உள்ள அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பெண் டைரக்டர் வின்டா நந்தாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்தனர்.

மனுவில், எங்கள் புகாரை கருத்தில் எடுத்துக்கொண்டு அம்போலி போலீசார் வின்டா நந்தா மீது அவதூறு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும். அடிப்படை ஆதாரம் அற்ற இந்த புகாரின் காரணமாக வீட்டில் இருந்து வெளியில் தலை காட்ட முடியாமல் தவிக்கிறோம். இதற்கு காரணமான வின்டா நந்தா 1 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அலோக்நாத்தின் மனைவி ஆசு நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story