5 நிமிடத்தில் வாருங்கள் என சிறுவன் கூறியது கடத்தல் என்ற அச்சத்தில் போலீசாரை அழைத்த தந்தை


5 நிமிடத்தில் வாருங்கள் என சிறுவன் கூறியது கடத்தல் என்ற அச்சத்தில் போலீசாரை அழைத்த தந்தை
x
தினத்தந்தி 17 Oct 2018 10:10 AM GMT (Updated: 17 Oct 2018 10:10 AM GMT)

5 நிமிடத்தில் வாருங்கள் என சிறுவன் கூறியது 5 லட்சத்துடன் வாருங்கள் என கேட்டு தந்தை அச்சத்தில் போலீசாரை தொடர்பு கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

நொய்டா,

உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் சிஜார்சி பகுதியில் 6ம் வகுப்பு படித்து வந்த சிறுவனை அவனது குடும்பத்தினர் அடிக்கடி திட்டி வந்துள்ளனர்.

அவனது தந்தை மளிகை கடை வைத்துள்ளார்.  அதனால் சிறுவனை கல்லாபெட்டியை கவனித்து கொள்ளும்படி அவர் கூறுவார்.  அந்த சிறுவன் கல்லாபெட்டியில் இருந்து பணம் எடுப்பது வழக்கம்.  இதேபோன்று சமீபத்தில் ரூ.100 பணம் எடுத்தது அறிந்து அவனது வீட்டில் திட்டியுள்ளனர்.

இந்த நிலையில், வீட்டை விட்டு பள்ளி கூடத்திற்கு புறப்பட்டு சென்ற சிறுவன் பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு பிஸ்ராக் என்ற பகுதிக்கு சென்றுள்ளான்.

அங்கு சிறிது நேரம் சுற்றி திரிந்த அவன் பசித்ததில் வீட்டை தொடர்பு கொள்ள விரும்பியுள்ளான்.  இதனை அடுத்து தொழிலாளி ஒருவரிடம் மொபைல் போனை கேட்டு வாங்கி வீட்டுக்கு தொடர்பு கொண்டுள்ளான்.

அவன் தனது தந்தையிடம், பிஸ்ராக் பகுதிக்கு வந்துள்ளேன்.  5 நிமிடங்களில் இங்கு வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளான்.

ஆனால் சிறுவனின் தந்தைக்கு 5 லட்சம் பணத்துடன் வாருங்கள் என கேட்டுள்ளது.  இதனால் போலீசாரை அவர் தொடர்பு கொண்டுள்ளார்.  தனது மகன் கடத்தப்பட்டு உள்ளான்.  அவனை விடுவிக்க ரூ.5 லட்சம் கேட்கின்றனர் என கூறியுள்ளார்.

போலீசார் மொபைல் போன் எண்ணை கண்காணித்துள்ளனர்.  ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.  இதனால் கடத்தல் சந்தேகம் அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து பிஸ்ராக் பகுதிக்கு போலீசார் குழு ஒன்று சென்றது.  தொடர்ந்து மொபைல் போன் எண்ணை அழைத்து உள்ளனர்.  இதில் சில மணிநேரத்திற்கு பின் போன் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு உள்ளது.  அவர்கள் தொழிலாளியை கண்டுபிடித்தனர்.  அவர் அருகிலேயே சிறுவன் சுற்றி திரிந்து கொண்டிருந்துள்ளான்.

அதன்பின் விவரம் அறிந்து, தவறான புரிதலால் இந்த சம்பவம் நடந்து விட்டது என சிறுவனின் தந்தை கூறி விட்டு சிறுவனை அழைத்து சென்றார்.  தொடக்கத்தில் கடத்தல் சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு பின்னர் சிறுவன் வீட்டை விட்டு சென்று பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது என போலீசார் கூறினர்.

Next Story