மத்திய மந்திரி பதவி விலகல்; பெண் பத்திரிகையாளர்கள் வரவேற்பு


மத்திய மந்திரி பதவி விலகல்; பெண் பத்திரிகையாளர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 17 Oct 2018 3:22 PM GMT (Updated: 17 Oct 2018 3:22 PM GMT)

பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய பெண் பத்திரிகையாளர்கள் சிலர் மத்திய மந்திரி அக்பர் பதவி விலகல் முடிவை வரவேற்றுள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய காலத்தில் சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இவர் மீது வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தனர். இதில் பிரியா ரமணி, கசாலா வகாப், ஷுமா ரகா, அஞ்சு பாரதி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களும் அடங்குவர்.

இந்நிலையில், பெண் பத்திரிகையாளரான துஷிடா பட்டேல் மற்றும் பெண் தொழிலதிபரான சுவாதி கவுதம் நேற்று அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.  இதனால் அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள பெண்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

இதனை தொடர்ந்து இன்று மத்திய மந்திரி அக்பர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

அவரது இந்த முடிவை பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய பெண் பத்திரிகையாளர்கள் சிலர் வரவேற்றுள்ளனர்.  நீதி கிடைத்த உணர்வு ஏற்பட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பிரியா ரமணி கூறும்பொழுது, நீதிமன்றத்தில் தனக்கும் நீதி கிடைக்கும் நாள் வரும் என நான் காத்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.  இவருக்கு எதிராக அக்பர் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

தி ஆசியன் ஏஜ் பத்திரிகையில் ஆசிரியராக உள்ள சுபர்ணா சர்மா கூறும்பொழுது, இது எங்களுக்கு ஒரு பெரிய நிகழ்வு.  டெல்லி வந்தவுடனேயே இந்த முடிவை அவர் எடுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று மும்பை மிர்ரர் பத்திரிகையின் ஆசிரியராக உள்ள மீனாள் பேகல் கூறும்பொழுது, இது சரியான விசயம்.  நாங்கள் இதனை வரவேற்கிறோம்.  எங்களுக்கு ஆதரவு தந்த ஒவ்வொருவருக்கும் மிக பெரிய நன்றி என தெரிவித்துள்ளார்.

Next Story