தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் -400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது : வெளியுறவுத்துறை அமைச்சகம்


தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் -400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது : வெளியுறவுத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 18 Oct 2018 6:15 PM IST (Updated: 18 Oct 2018 6:15 PM IST)
t-max-icont-min-icon

தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் -400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரான்சிடம் இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று. இந்தியா- பிரான்சு இடையேயான உறவில் எந்த தொய்வும் இல்லை. 

தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் 400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது. நமது கொள்கைகள் மற்றும் எண்ணத்தை அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நமது எதிர்பார்ப்புகளையும் அந்நாட்டிடம் தெரிவித்து விட்டோம். ஈரான் மீதான தடை இந்தியாவை பாதிக்காது என்று அமெரிக்க மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை, பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளோம். இதனால், தான் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் பேச்சுவார்த்தைக்கான ஆக்கப்பூர்வான சூழ்நிலையை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்.

எச்1 பி விசா விவகாரம் முக்கியமானது. இது குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போதும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இலங்கையுடன் வலுவான நல்லுறவை கொண்டுள்ளோம். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
1 More update

Next Story