2019 பாராளுமன்றத் தேர்தலில் டோனி, கவுதம் கம்பீரை களமிறக்க பா.ஜனதா திட்டம்


2019 பாராளுமன்றத் தேர்தலில் டோனி, கவுதம் கம்பீரை களமிறக்க பா.ஜனதா திட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2018 1:26 PM GMT (Updated: 2018-10-22T18:56:17+05:30)

2019 பாராளுமன்றத் தேர்தலில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் டோனி, கவுதம் கம்பீரை களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. டெல்லியில் கவுதம் கம்பீரையும், ஜார்க்கண்டில் டோனியையும் களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என தி சண்டே கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தலில் நட்சத்திரங்களை களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியது. இப்போது இந்நகர்வில் முக்கியமாக பார்க்கப்படுகிறது கிரிக்கெட் வீரர்கள் டோனி, கவுதம் கம்பீர் பெயர் அடிபடுவது. கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஓய்வை அறிவிக்காமல் விளையாடி வரும் கவுதம் கம்பீர், பல்வேறு சமூக அக்கறையான செயல்களை மேற்கொண்டு வருகிறார். 

பயங்கரவாதிகளுடனான மோதல்களில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி, சமூதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு படிக்க உதவி போன்றவற்றை செய்து வருகிறார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்திரமான மற்றும் அதிரடியான கருத்துக்களை தெரிவிப்பவர். அரசியல் பற்றி பேசும் அவர் அதுதொடர்பான அறிவிப்பு எதையும் வெளியிட்டது கிடையாது. இந்நிலையில் அவரை டெல்லியில் களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. அப்படி கம்பீரை களமிறங்கினால், அக்கட்சியின் எம்.பி. மீனாட்சி லெகியிடம் இருந்து வாய்ப்பு பறிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மீனாட்சி லெகியின் செயல்பாட்டில்  பா.ஜனதாவிற்கு திருப்தி கிடையாது, எனவே கம்பீருக்கு வலைவீசுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவர் பேசுகையில், “கட்சியின் அடிமட்டத்திலிருந்து மீனாட்சி லெகி பற்றிவரும் தகவல்கள் திருப்திகரமாக இல்லை. அவருடைய தொகுதியை சேர்ந்த மக்களும் அவருடைய செயல்பாட்டில் திருப்தியாக இல்லை. அவரை மறுபடியும் களமிறக்க பா.ஜனதா வாய்ப்பு வழங்காது. கிரிக்கெட் வீரர் கம்பீரை வேட்பாளராக அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அவரின் சமூக சேவையே காரணம். டெல்லி மக்களும் கம்பீர் மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர்,” என கூறியுள்ளார் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று டோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் டோனியை களமிறக்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story