பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சாவு


பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சாவு
x
தினத்தந்தி 24 Oct 2018 9:30 PM GMT (Updated: 2018-10-25T02:10:06+05:30)

பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான நவ்காமில் பயங்கரவாதிகள் புகுந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று அதிகாலையில் தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதியை சுற்றிவளைத்து வீரர்கள் தேடுதலில் இறங்கினர். ஒரு வீட்டை நோக்கி அவர்கள் முன்னேறும் போது, அங்கே பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் தானியங்கி ஆயுதங்களால் தாக்கினர்.

இதைத்தொடர்ந்து வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வெடிகுண்டு வீசி அந்த வீட்டையும் தகர்த்தனர். இதில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களது உடலையும், அங்கே மறைத்து வைக்கப்பட்டு இருந்த பயங்கர ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நடைபெறும் பகுதிகளில், தேடுதல் வேட்டை முடிவதற்குமுன் பொதுமக்கள் யாரும் சம்பவ இடத்துக்கு செல்லக்கூடாது என பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு எதிரான என்கவுண்ட்டர் குறித்த தகவல் அறிந்ததும் நவ்காமுக்கு அருகே ஏராளமான பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசிய அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர். அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்க கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதுடன், இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் உள்ள உரி ராணுவ நிலையில் பணியில் இருந்த தேவேந்திரப்பா என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் எல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story