சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது நடவடிக்கை ஏன்? - மத்திய அரசு விளக்கம்


சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது நடவடிக்கை ஏன்? - மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 24 Oct 2018 11:00 PM GMT (Updated: 24 Oct 2018 9:27 PM GMT)

சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கான காரணங்களை விளக்கி, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கான காரணங்களை விளக்கி, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சி.பி.ஐ.யின் உயர் பதவியில் இருந்த அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர்மீது ஒருவர் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இது, ஊடகங்களில் பரவலாக வெளியானது. இதனால், சி.பி.ஐ.யில் சுமுக சூழ்நிலை சீர்குலைந்தது.

அத்துடன், இந்த கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியது. சி.பி.ஐ.யின் நற்பெயரையும், நம்பகத்தன்மையையும் அது இழக்க வைத்தது.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தானா கூறிய புகார் தொடர்பான கோப்புகளையும், ஆவணங்களையும் அனுப்புமாறு சி.பி.ஐ.யிடம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டது. அதை 3 வாரங்களில் அளிப்பதாக சி.பி.ஐ. ஒப்புக்கொண்டது.

ஆனால், எத்தனையோ தடவை வாய்ப்பு கொடுத்தும், நினைவுபடுத்தியும் அந்த ஆவணங்களை சி.பி.ஐ. அளிக்கவில்லை. இதன்மூலம், சி.பி.ஐ. இயக்குனர், அரசியல் சாசன அமைப்பான ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்காதது உறுதி செய்யப்பட்டது.

ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் செயல்பாடுகளில் அவர் திட்டமிட்டு முட்டுக்கட்டை போட்டார். எனவே, ஊழல் கண்காணிப்பு ஆணையம், சட்டப்படி தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, 2 இயக்குனர்களின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

தனக்கு முன்பு வைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு கவனமாக அலசி ஆராய்ந்தது. அசாதாரணமான, முன்எப்போதும் இல்லாத சூழ்நிலை உருவாகி இருப்பதை உணர்ந்தது. எனவே, சமத்துவம், நியாயமான செயல்பாடுகள், இயற்கை நீதி ஆகியவற்றை காப்பாற்ற, சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

இது ஒரு இடைக்கால நடவடிக்கை ஆகும். இந்த அசாதாரண சூழ்நிலை உருவாக காரணமான அனைத்து விஷயங்கள் பற்றியும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தனது விசாரணையை முடிக்கும்வரையோ அல்லது மத்திய அரசு, சட்டப்படி உரிய முடிவு எடுக்கும்வரையோ இந்த நடவடிக்கை நீடிக்கும்.

இவ்வாறு மத்திய அரசு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சி.பி.ஐ. இயக்குனர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது, துரதிருஷ்டவசமான சூழ்நிலையை உருவாக்கியது. குற்றச்சாட்டின் உண்மைத்தன்மைக்குள் புக நான் விரும்பவில்லை.

சி.பி.ஐ. என்பது நாட்டின் உயரிய விசாரணை அமைப்பு. பல்வேறு ஊழல் புகார்களை விசாரிக்கும் அதன் உயர் அதிகாரிகள் மீதே புகார் வந்தால், யார் விசாரிப்பது? மத்திய அரசு விசாரிக்க முடியாது, விசாரிக்கவும் செய்யாது. வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஊழல்பேர்வழிகள், சி.பி.ஐ. மீது விரல் நீட்டி அவதூறு பேசும் சூழ்நிலை உருவாகிவிடக்கூடாது. சி.பி.ஐ.யின் நேர்மைத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும்.

ஆகவே, ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி, 2 இயக்குனர்களும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதற்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லை. இது ஒரு இடைக்கால நடவடிக்கை. அவர்கள் நிரபராதிகள் என்றால் திரும்பி வருவார்கள்.

ரபேல் போர் விமானம் தொடர்பான கோப்புகளை சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா கேட்டதால்தான், அவர் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது அபத்தமானது. சி.பி.ஐ. அடுத்து என்ன செய்யும் என்பது எங்களுக்கு தெரியும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதே, நேர்மையான செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்புவது ஆகும்.

சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, பிரதமர் மோடிக்கு வேண்டியவர் என்று கூறப்படுவது தவறு. ஆதாரங்களின் தன்மைதான் முக்கியம். யார் வேண்டியவர், வேண்டாதவர் என்பது அல்ல.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Next Story