ஜம்மு காஷ்மீரில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு, ராணுவம் குவிப்பு


ஜம்மு காஷ்மீரில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொலை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு, ராணுவம் குவிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2018 7:24 AM IST (Updated: 2 Nov 2018 7:24 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் பாஜக நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் மாநில பாஜக செயலாளர் அனில் பாரிஹர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் நேற்று மாலை மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் ரவிந்தர் ரெய்னா அளித்த பேட்டியில், “ நேற்று மாலை 8 மணியளவில் பாஜக மாநில செயலாளர் அனில் பாரிஹர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பயங்கரவாதிகளால் சுடப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களது உயிர் பிரிந்தது” என்றார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிஷ்த்வாரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் செயலா? அல்லது வேறு ஏதேனும் குற்றச்செயல் காரணமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பாஜகவைச்சேர்ந்த பிரமுகர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேதனை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் ராஜ்நாத்சிங் கூறியிருப்பதாவது:- “ ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக நிர்வாகி அனில் பரிஹார் மற்றும் அவரது சகோதரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சி மற்றும் வேதனை அடைந்தேன். ஜம்மு காஷ்மீர்  மாநில ஆளுநரின் ஆலோசகருடன் பேசினேன். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்டிப்பாக நீதி முன் நிறுத்துவார்கள்” என்று தெரிவித்தார்.  அதேபோல், பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். 


Next Story