சபரிமலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது கேரள அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்


சபரிமலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது கேரள அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்
x
தினத்தந்தி 18 Nov 2018 9:30 AM GMT (Updated: 18 Nov 2018 9:30 AM GMT)

சபரிமலையில் பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.



திருவனந்தபுரம்,

 
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. பெண்களை அனுமதிப்பதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது, போராட்டமும் தொடர்கிறது. 

போராட்டம் தொடரும் நிலையில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கோவில் வெள்ளியன்று திறக்கப்பட்டது. கேரளா, தமிழகம், தெலங்கானா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் இருமுடியுடன் குவியத் தொடங்கி உள்ளனர். அங்கு வழக்கத்திற்கு அதிகமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

 இந்நிலையில் சபரிமலையில் பக்தர்களுக்கு அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ் குழு ஆய்வு செய்தது.

குழுவில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான திருவச்சனூர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், சபரிமலை சன்னிதானம் பகுதி இப்போது பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. பக்தர்கள் சபரிமலைக்குள் நுழைய மிகுந்த கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதிகமான போலீஸ் குவிப்பால் வழக்கமாக வரும் பக்தர்கள் கூட்டமும் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அடூர் பிரகாஷ் பேசுகையில், “சபரிமலையில் பாதுகாப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் போலீஸை குவித்து கேரள அரசு அச்சுறுத்தலான சுழலை உருவாக்கியுள்ளது,” என்று குற்றம் சாட்டியுள்ளார். 

முன்னாள் தேசவசம் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான வி.எஸ்.சிவகுமார் பேசுகையில், சபரிமலைக்கு வரும் அதிகமான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்க அரசு நடவடிக்கையை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். “ நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை  செய்து கொடுக்க அரசுக்கு விருப்பம் கிடையாது. மாறாக பக்தர்களுக்கு இடையூறு செய்வதில் நாட்டம் கொண்டுள்ளது,” எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 
 

Next Story