சிலநாள் மந்த நிலைக்குப்பின், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அலைமோதியது


சிலநாள் மந்த நிலைக்குப்பின், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அலைமோதியது
x
தினத்தந்தி 24 Nov 2018 10:45 PM GMT (Updated: 24 Nov 2018 8:20 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த தீர்ப்பை தொடர்ந்து 2 முறை சபரிமலையில் நடை திறக்கப்பட்ட போது, அங்கும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

எனவே சபரிமலையில் தற்போது மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு போராட்டங்களை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்து உள்ளனர். பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதுடன், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட தொடக்க நாட்களில் சபரிமலையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து அங்கு பக்தர்களின் வருகை மந்தமாகவே இருந்தது. இதனால் சபரிமலை சன்னிதானம் வெறிச்சோடியே காணப்பட்டது. இதற்கு போலீசாரின் கெடுபிடிகளே காரணம் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர்.

பக்தர்கள் வருகை குறைவால் கோவிலின் வருமானமும் அடியோடு குறைந்தது. இது திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதை பாதிக்கும் என கேரள இந்து அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனும் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சிலநாள் மந்த நிலைக்குப்பின் மீண்டும் நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சன்னிதானம் மற்றும் பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசித்து சென்றனர்.

இதற்கிடையே சபரிமலை விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. சபரிமலை பிரச்சினையை கையாளுவதில் திறனற்ற செயல்பாடுகள் மூலம் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சை ஊக்குவிப்பதாக மாநில அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான ஏ.கே.அந்தோணி குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன், சபரிமலை விவகாரத்தில் மாநில அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை கேரள ஐகோர்ட்டும் பாராட்டி இருப்பதாக கூறியுள்ளார். காங்கிரசாரின் இந்த குற்றச்சாட்டில் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் தனது பேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

சபரிமலையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து மாநில கவர்னர் சதாசிவத்திடம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் விளக்கினார். இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை கவர்னர் புரிந்து கொண்டதாகவும், சபரிமலையில் அமைதி திரும்ப அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறியதாகவும் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பின்னர் தெரிவித்தார்.

சபரிமலைக்கு வந்திருந்த 52 வயது பெண் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் சுரேந்திரனை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பத்தனம்திட்டா கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

முன்னதாக போலீசாரின் தடையையும் மீறி சபரிமலை செல்ல முயன்றதாக கடந்த வாரம் தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சுரேந்திரனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட சம்பவம் கேரள பா.ஜனதாவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



Next Story