வேறு பிரச்சினைகள் இல்லாததால் காங்கிரஸ் என் மீது சேற்றை வாரி வீசுகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு


வேறு பிரச்சினைகள் இல்லாததால் காங்கிரஸ் என் மீது சேற்றை வாரி வீசுகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Nov 2018 11:15 PM GMT (Updated: 2018-11-26T01:54:51+05:30)

வேறு பிரச்சினைகள் இல்லாததால், காங்கிரஸ் என் மீது சேற்றை வாரி வீசுகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

ஆல்வார்,

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஆல்வார் நகரில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

பேசுவதற்கு வேறு பிரச்சினைகள் இல்லாததால், காங்கிரஸ் கட்சி என் மீது சேற்றை வாரி வீசுகிறது. தரம் தாழ்ந்த அரசியலை நடத்துகிறது. ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, சேற்றை வாரி இறைக்கிறது.

ஒரு காங்கிரஸ் தலைவர், என் தாயாரை திட்டுகிறார். மற்றொரு தலைவர், என் தந்தையை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார். இன்னொருவர் எனது சாதியை பற்றி கேள்வி எழுப்புகிறார்.

அவர்கள் யார் என்பது முக்கியம் அல்ல. அவர்களை இப்படி பேசச்சொல்லி தூண்டி விட்டது யார் என்பதுதான் முக்கியம். பரம்பரை வழி வந்த தலைவர் கொடுத்த கட்டளைப்படியே அவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

4 தலைமுறைகளாக இந்த நாட்டை ஆண்டவர்கள் மூலமாக நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்திய அரசின் தலைவர் வெளிநாட்டுக்கு செல்லும்போது அவரது சாதியை பற்றி உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்த மனோபாவம், அவர்களின் தலித் விரோத, சாதிய முகத்தை வெளிப்படுத்து கிறது. அந்த கட்சிக்கு தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் மீது எப்போதும் வெறுப்புதான் உள்ளது.

நீதித்துறை மீதும், ஜனநாயகம் மீதும் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த விரும்பாமல், அதை முடக்க பார்த்தது. இப்போது, காங்கிரஸ் கட்சி புதிய ஆபத்தான விளையாட்டை தொடங்கி இருக்கிறது.

அதாவது, காங்கிரசின் அரசியல் நோக்கத்துக்கு ஏற்ப சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வழக்குகளின் கால அட்டவணையை தயாரிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவதாக அச்சுறுத்த தொடங்கி உள்ளனர். அயோத்தி வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தில், மாநிலங்களவையில், உள்ள காங்கிரசின் வக்கீல் எம்.பி.க்கள் இப்படி செய்தனர். எண்ணிக்கை பலத்தை வைத்து இந்த காரியத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால், ஜனநாயகத்தை காப்பாற்ற இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அரசு, கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை எட்டிப்பிடிக்க காங்கிரசுக்கு 75 ஆண்டுகள் தேவைப்படும். இவ்வாறு மோடி பேசினார்.Next Story